திருவண்ணாமலை : மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்

திருவண்ணாமலை : மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்
திருவண்ணாமலை : மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இங்கு முழுக்க முழுக்க அரசு மருத்துமனைகளில் ஆங்கில மருத்துவம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு பகுதியாக பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் சித்த வைத்திய முறைப்படி நோயாளிகளை குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் தற்போது 51 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த 5ஆம் தேதி இரண்டு பேர் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு 8ஆம் தேதி மறு பரிசோதனை செய்த போது ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்து அவர் குணமாகி விட்டார். இதையடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மற்றொருவருக்கு இன்னும் சரியாகவில்லை என்பதால் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவத்தின் மூலம் மூன்றே நாளில் ஒருவருக்கு குணமடைந்து நெகட்டிவ் என்று வந்ததில் மகிழ்ச்சி எனவும் இது எங்களுக்கு மேலும் உற்சாகம் கொடுக்கிறது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகையில், “முதலில் காலையில் மஞ்சள்தூள், உப்பு இவற்றை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை சுத்தமாகும். கிருமி ஒழிக்கப்படுகிறது. இரண்டாவதாக சித்த மருத்துவம் யோகாசனப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மூன்றாவதாக சிற்றுண்டிக்கு பிறகு கபசுரக் குடிநீர் மற்றும் சித்த மருந்துகளாக இஞ்சிச்சாறு தேன் கொடுக்கப்படுகிறது. நான்காவதாக 11 மணிக்கு சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், மஞ்சள் மர மஞ்சள் சேர்த்து மூலிகை தேனீர் கொடுக்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதுடன் நோய் அறிகுறிகளை முழுவதுமாக குறைக்கிறது. ஐந்தாவதாக மதியம் வழக்கமாக சைவ சாப்பாடு கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் தவிர்க்கப்பட வேண்டும்”எனத் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்த அவர்கள் “மாலை சூப் மற்றும் சுண்டல் கொடுக்கப்படுகிறது. இரவு உணவுக்குப்பின் கபசுரக் குடிநீர் மற்றும் உப்பு மஞ்சள் தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலமே இவர்கள் மூன்று நாளில் குணமாக்கப்படுகிறார்கள். சிலரின் நோயின் வீரியத்தை பொறுத்து மேலும் சில நாட்கள் தள்ளிப் போகிறது. எப்படி இருந்தாலும் ஒரு வாரத்தில் கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைவார்கள்” என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வீட்டில் இருப்பவர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசிய மருத்துவர்கள் “சித்த மருத்துவ முறை, பாரம்பரிய மருத்துவம், உணவே மருந்து மருந்தே உணவு என்ற முறையில் நாம் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கொரோனா நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் கபசுரக் குடிநீர் இரவில் ஒரு வேளை மட்டும் குடித்தால் போதுமானது. இந்த நோய் வராமல் தவிர்த்து விடலாம்.

மேலும் இஞ்சி, எலுமிச்சை, புதினா இவைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து சாப்பிடலாம். மஞ்சள், வேப்பிலை,நொச்சி இலை போன்றவற்றைச் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை ஆவி பிடித்தால் சுவாசமண்டலம் சுத்தம் ஆகும். மேலும் எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் வீட்டில் சுக்கு காபி போட்டு சாப்பிடுவது நல்லது. வீட்டில் குளிர்ச்சியான தயிர் மோர், மற்றும் குளிர்ச்சியான பழங்கள் இவைகளை தவிர்ப்பது நல்லது” எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com