‘கொரோனா அறிகுறி தெரிய குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகும்’ - ஆய்வாளர்கள்
ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அறிகுறிகள் வெளியே தெரிய குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ப்ளூம்பெர்க் பள்ளியை சேர்ந்த பேராசிரியர்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அறிகுறிகள் வெளியே தெரிய ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அந்த ஆய்வு கூறுகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பில்கேட்ஸூக்கு சொந்தமான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு 300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர், 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதை அடுத்து, நாடு முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55ஐ தாண்டியுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

