கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்தனர் - மகாராஷ்டிரா சுகாதாரத்துறை
மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற நால்வர் முழுவதுமாக குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் மொத்தம் 606 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களுக்கு நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தான் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மகிழ்ச்சியான விஷயத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளது. அதில் " கொரோனாவால் முதலில் அனுமதிக்கப்பட்ட இருவர் முழுவதுமாக சிகிச்சைப் பெற்று நோயிலிருந்து விடுப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு இரண்டு முறை சோதனை செய்து கொரோனா நெகடிவ் உறுதி செய்யப்பட்டது.
அதேபோல மும்பை மற்றும் அவுரங்காபாத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும் கொரோனா தொற்று முழுமையாக குணமாகி அவர்களையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

