புதுச்சேரி: கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு
புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி அனிதா. இவர்களது ஒன்றரை மாதம் குழந்தை தர்ஷன். இவர்கள் 3 பேருக்கும் சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யபட்டது. இதையடுத்து 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இந்நிலையில், மகேந்திரன் தனது மனைவி, பிள்ளையுடன் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “கொரோனா பரிசோதனை செய்ததையடுத்து இருவரையும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மருத்துவமனை ஊழியர்கள் பின்பு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவலை தெரிவிக்கவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் தங்களின் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் அவர்கள் புதுச்சேரி மருத்துவமனைக்கு திரும்பி வருவார்கள்” எனத் தெரிவித்தனர்.