கொரோனா எச்சரிக்கை: சமூகத்திலிருந்து தனித்திருத்தல் என்றால் என்ன?
ஆரோக்கியமான நபர் ஒருவர் வழக்கம்போல ரயில் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார். அலுவலகத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக எடுத்துக் கொள்வோம்.
தொற்று ஏற்பட்ட உடனேயே அவருக்கு கொரோனா அறிகுறி தெரியாதென்பதால், பின்னர் அவர் விளையாட்டு மைதானம் செல்கிறார். நெருக்கமாக அமரும் வாய்ப்பு கொண்ட மைதானத்தில் அவரது அருகிலிருந்த ஒரு முதியவர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அதில், கொரோனாவின் அறிகுறி உடனடியாக தெரிய வாய்ப்புள்ள முதியவர் மட்டும் மருத்துவமனையில் சேர்ந்துவிடுவார்.
ஆரோக்கியமானவர்களுக்கு குறைந்தது 14 நாட்களுக்கு பிறகே அறிகுறி தெரிய ஆரம்பிக்கும். அதனால் தாம் ஆரோக்கியமாக இருப்பதாகவே எண்ணும் அந்த 3 பேரும், வழக்கம்போல் ரயில் மூலம் அலுவலகமோ, வீடுகளுக்கோ செல்லும்போது அங்குள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புள்ளது. மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் மருத்துவமனையின் திறன் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்தத் திறனை மீறி அதிகம் பேர் கொரோனா தொற்றோடு குறுகிய காலத்தில் மருத்துவமனைகளில் சேர்வதால், மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிவிடும். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் கிடைக்காதபட்சத்தில், உயிர்பிழைக்க வாய்ப்புள்ள சிலரும், கொரொனா அல்லாமல் வேறு காரணங்களுக்காக மருத்துவமனை வருபவர்களும் இறந்துபோவதற்கான வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழல் ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் நாம் ஒவ்வொருவரும் பொது இடங்களுக்கு அவசியமின்றி செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காகத்தான் சிறு ஒன்றுகூடல்களைக் கூட தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதைத்தான் சமூகத்திலிருந்து தனித்திருத்தல் என்கிறார்கள்.