கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் கழிவுகளால் தொற்று பரவுமா?: ஆய்வில் புதிய தகவல்
கொரோனா வைரஸ் பாதித்த நபர்களின் மனித கழிவுகள் மூலம், தொற்று பரவாது என சென்னை கழிவுநீர் அகற்றுதல் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை பெருநகரத்தில் உள்ள வீடுகள் ஓட்டல்கள் தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் இருந்து உருவாகும் கழிவுநீர் கோயம்பேடு, கொடுங்கையூர் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் சுத்திகரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் இருக்கும் வீடுகளிலிருந்து வெளிவரும் கழிவுகளை ஆய்வு செய்தபோது அதில் வைரஸ் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்து இருக்கிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் உள்ள கழிவுநீர் சாலைகளில் தேங்கி இருக்கும் போது மற்ற மனிதர்களுக்கு பரவிவிடுமோ என அச்சம் நிலவிய நிலையில், அவ்வாறு பரவாது என்பதும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் அங்கீகரித்து என்கிறார் சென்னை கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் செயல் இயக்குநர் பிரபு சங்கர்.
தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், தண்ணீரில் கொரோனா வைரஸ் இருந்து அதை ஒருவர் பருகினால் கூட அதனால் வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என தொற்று நோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வுகள் மற்றும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளதால், மனித கழிவுகள் மூலம் வைரஸ் பரவும் என மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கழிவுநீர் அகற்றல் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.