கொரோனா வைரஸ்
தஞ்சை: அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
தஞ்சை: அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா பரவல் அச்சம் காரணமாக 2020 முதல் மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகள், தமிழ்நாட்டில் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்டு 4 நாள்களேயான நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் மத்தியில் கொரோனா உறுசெய்யப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக தஞ்சையில் அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கல்லூரியில் உடன்படிக்கும் பிற மாணவர்கள், ஆசிரியர்களிடையே கவலையையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பின்படி பள்ளி கல்லூரிகள் 1-ம் தேதி திறக்கப்பட்டது. ஏற்கெனவே தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்பது நூறு என்ற எண்ணிக்கையை கடந்து இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே பள்ளி கல்லூரிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக, கல்லூரிகள் திறக்கப்பட்ட நாளன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 914 மாணவிகள், 24 ஆசிரியர்கள் என 948 பேருக்கு முன்னெச்சரியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தொடர்ந்து கல்லூரியில் தடுப்பூசி போடக்கூடிய பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரிசோதனை செய்த மாணவிகளில் மூன்றாம் ஆண்டு பிகாம் பயிலும் ஆளக்குடியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு தொடர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாணவி முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற யாருக்கும் தொற்று இல்லாத நிலையில் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காய்ச்சல் அறிகுறியுடன் பள்ளி கல்லூரிகளுக்கு வரவேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மட்டுமன்றி பிற மாவட்டங்களிலும் ஆங்காங்கே மாணவர்களிடையே கொரோனா பரவுவதால், அரசு இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.