சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் - அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு
சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் வேறெந்த இணை நோயும் இல்லாமல் கொரோனா தாக்கத்தால் மட்டும் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 3,051 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்றே குறைய தொடங்கினாலும், கொரோனா உயிரிழப்புகள் நாள்தோறும் ஒரே அளவில் தான் உள்ளது.
39வது நாளாக இன்றும் இரட்டை இலக்கில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் 64 உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், தனியார் மருத்துவமனைகளில் 21 பேரும், அரசு மருத்துவமனைகளில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர். இணை நோய்கள் வேறு எதுவும் இல்லாமல் கொரோனா தாக்கத்தால் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிக அளவில் 50 வயதினை கடந்தவர்களே கொரோனாவால் உயிரிழக்கின்றனர். இருப்பினும், 50 வயதிற்குட்பட்டவர்களின் மரணமும் கணிசமான அளவில்தான் இருந்து வருகிறது. அதேபோல், 20-30 வயதுடைய இளைஞர்களும் கொரோனாவுக்கு பலியாகின்றனர்.
அந்த வகையில் இன்று 23 வயதே ஆன சென்னையைச் சேர்ந்த இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அவருக்கு வேறெந்த இணை நோயும் இல்லை. இரண்டு நாட்களாக சளி காய்ச்சல் மற்றும் ஒரு நாள் மூச்சுப் பிரச்னை இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் ஜூலை 6ஆம் தேதி காலை 6.53 மணியில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.