நான் கொரோனா வைரஸ் ! வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் போலீஸ் !
கொரோனா வைரஸ் போன்ற தோற்றத்தை கொண்ட ஹெல்மெட் அணிந்து ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலையில் செல்வோருக்குக் காவல் அதிகாரி ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
190க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக 85,600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 15 பேர் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் ஒருவர் குணமடைந்து வருவதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், ஆங்காங்கே பொது மக்கள் அரசின் உத்தரவை மீறி வெளியே வருகின்றனர். பல நேரங்களில் போலீஸார் அறிவுரைகள் கூறியும், அபராதம் விதித்தும், வழக்கு தொடர்ந்தும் வருகின்றனர். சென்னையில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸ் போன்ற ஹெல்மெட்டை அணிந்து, வாகனங்களில் செல்வோருக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் வாகன ஓட்டிகளிடம் "நான் யார் கொரோனா வைரஸ்தானே, உங்க நடுவல வந்து உட்கார்ந்தால் என்னாகும் ? என்று கேள்வி எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.