கொரோனா பாதித்த வீடுகளில் தகரமடித்த பொறியாளர்களுக்கு தொற்று : சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களபணியாளர்களான மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மாநராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க பாடுபட்ட 400க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வருவாய்துறை, மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்து உயர் அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சியில் பொறியாளர்கள் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை பொதுத்துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வார்டு வாரியாக உதவி பொறியாளர் தலைமையில் மைக்ரோ குழுக்கள் அமைக்கப்பட்டு தினமும் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா பாதிக்கப்பட்ட வீடுகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாற்றவது, தகரம் அடிப்பது உள்ளிட்ட பணிகளை இந்தப் பொறியாளர்கள் செய்து வந்தனர். இந்த பணிகளை செய்து வந்த பொறியாளர்கள் தான் அதிகம் போர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.