மருந்தகத்தில் திருடிய சிறுவன் : எதிர்காலம் கருதி புகாரளிக்காத மருத்துவமனை
விருதுநகரில் பிரபல தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் சிறுவன் ஒருவர் ரூ.20 ஆயிரம் திருடியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
விருதுநகர் மாவட்டம் மேலரத வீதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் உள்ளே மருந்தகமும் இயங்கி வருகிறது. மருந்தக ஊழியர்கள் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்துள்ளனர். அப்போது மருந்தகத்தின் பணப்பெட்டியில் இருந்த பணம் ரூ.20,000 திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே திருடு குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது சிறுவன் ஒருவன் மருந்தகத்தில் உள்ள பணப்பெட்டியில் இருந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதைத்தொடர்ந்து விருதுநகர் பஜார் காவல்நிலைய போலீசார் மருத்துவமனை சென்று மருந்தக ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். அதில், விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியை சேர்ந்த பாலகுருவன் என்பவர் சிசிக்கைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகியதும், அவரது பேரன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் புகார் அளிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் போலீசாரால் வழக்கு பதிவு செய்ய இயலவில்லை. பள்ளி செல்லும் சிறுவன் என்பதால் புகார் அளிக்க விரும்பவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.