கொரோனா பற்றிய தகவல் அறியாமல் பணியாற்றும் விவசாயிகள்
பொலிவியா மற்றும் கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை விளைவிப்பதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், கொலம்பியாவின் முக்கிய நகரங்களில் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகள் திறந்தே இருக்கின்றன. இதனால் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தொடர்ந்து விளைப் பொருட்களை விளைவிக்க வேண்டிய அழுத்தத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
கொலம்பியா தலைநகரில் இருந்து 223 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போயாகா எனற பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு இதுவரை கொரோனா வைரஸின் பாதிப்பு பற்றி அரசு தரப்பில் எடுத்துரைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், வயல்களில் பணியாற்றும் விவசாயிகளுக்கு முகக்கவசம் உள்ளிட்ட எந்தவொரு நோய் தடுப்பு சாதனங்களும் வழங்கப்படவில்லை.
இந்தச் சூழலில், அந்தப் பகுதிக்கு சென்ற வேளாண் தலைவர் சீஸர் பச்சோன், விவசாயிகளுக்கு முகக்கவசங்களை வழங்கி, கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து விளக்கினார். உருளை மகசூலில் தீவிரமாக இயங்கி வந்த விவசாயிகள், சற்று நேரம் பணிகளை புறந்தள்ளிவிட்டு, வேளாண் தலைவரின் அறிவுரையை கேட்டுக் கொண்டனர்.