கருப்பு பூஞ்சைத் தொற்று: அறிகுறிகள், சிகிச்சை, தற்காப்பு வழிகள் - நிபுணரின் வழிகாட்டுதல்

கருப்பு பூஞ்சைத் தொற்று: அறிகுறிகள், சிகிச்சை, தற்காப்பு வழிகள் - நிபுணரின் வழிகாட்டுதல்
கருப்பு பூஞ்சைத் தொற்று: அறிகுறிகள், சிகிச்சை, தற்காப்பு வழிகள் - நிபுணரின் வழிகாட்டுதல்

நீரிழிவு நோயாளிகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் வரக்கூடிய கருப்பு பூஞ்சை தொற்று யாருக்கு, எப்படி ஏற்படுகிறது என்பது குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும், அதன் சிகிச்சை முறைகள் பற்றியும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் சீரமைப்பு, கண் புற்றுநோய் துறைத் தலைவர் மருத்துவர் உஷா கிம் விரிவாக விளக்கியுள்ளார். அதன் விவரம்...

கருப்பு பூஞ்சைத் தொற்று என்றால் என்ன?

இந்தக் கருப்பு பூஞ்சைத் தொற்று, அரிதாக ஏற்படக்கூடியது; மிக அதிக பாதிப்பை உண்டாக்கக்கூடியது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு இருக்கும். இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.

உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனா காலத்திற்கு முன்பிலிருந்தே இந்தியாவில் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகள், சீறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துகொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

அறிகுறிகள் என்ன?

• கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி அல்லது சிவந்து காணப்படுதல்

• முகத்தில் வலி

• கண்ணைச் சுற்றியுள்ள பகுதி, நிறம் மாறுதல்

• திடீர் பார்வையிழப்பு

• கண் வீக்கமடைதல்

• கருவிழி துருத்திக் கொண்டிருத்தல்

• கருவிழி அசையாமல் இருத்தல்

• கண் தசைகளுக்கு வலுவளிக்கும் நரம்புகள் செயலிழத்தல்

• காய்ந்த தீப்புண் போன்ற கருப்பு நிற புண்

• மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், மூக்கில் நீர் அல்லது இரத்தம் வடிதல்

இந்த நோய் தொற்று யாருக்கு ஏற்படும்?

பொதுவாக, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவிலிருந்து மீண்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

ஒருவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்துகள் கொரோனாவிலிருந்து மீண்டு வர உதவும். இருப்பினும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கக் கூடும். வைரஸானது நோயின் தீவிரத்தாலோ சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளும் மருந்தாலோ கணையத்தை பாதிக்கும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். கொரோனா நோய் காரணமாகவோ கொரோனா சிகிச்சை காரணமாகவோ ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கக்கூடும். எனவே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பிறகும் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.

இதற்கு என்ன சிகிச்சை?

கருப்பு பூஞ்சைத் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிறப்பு மருத்துவரை அணுகினால் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். காது, தொண்டை, கழுத்து சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்களால் இந்நோயை குணப்படுத்த முடியும். அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படும்.

தற்காத்து கொள்வது எப்படி?

• உடலில் ரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

• ரத்த சர்க்கரை அளவை தினமும் பரிசோதிக்க வேண்டும். இயல்பான அளவில் இருந்தால், கவலை கொள்ள தேவையில்லை. அதிகமாக இருந்தால், மேற்கூறிய அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களது பொது மருத்துவரை அணுகவும்.

• சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளவே கூடாது.

• மருத்துவர்களின் அறிவுரையின்றி எந்த மருந்தையும் நிறுத்தக் கூடாது.

• சர்க்கரை நோயாளிகள், கொரோனா நோயிலிருந்து தற்காத்து கொள்ள எப்போதும் முகக்கவசம் அணியவும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும். அடிக்கடி கை கழுவவும்.

- G.கணேஷ்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com