இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய புதிய வகை கொரோனாத் தொற்றால், இந்தியா உட்பட பல நாடுகள் இங்கிலாந்தில் வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமானநிலையத்திற்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர்த்து, மேலும் 50 பயணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகளின் மாதிரிகளில் தற்போது உருமாறியிருக்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய, அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா, டெல்லி, அகமாதாபாத் ஆகிய இடங்களுக்கு வந்த 20 பயணிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.