மீண்டும் தலைதூக்கும் ஒமைக்ரான் பி.ஏ.5 கொரோனா.. பைடனின் எச்சரிக்கை சொல்வது என்ன?

மீண்டும் தலைதூக்கும் ஒமைக்ரான் பி.ஏ.5 கொரோனா.. பைடனின் எச்சரிக்கை சொல்வது என்ன?
மீண்டும் தலைதூக்கும் ஒமைக்ரான் பி.ஏ.5 கொரோனா.. பைடனின் எச்சரிக்கை சொல்வது என்ன?

அமெரிக்க மக்களுக்கு அதிபர் ஜோ பைடனின் வெள்ளை மாளிகை சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவின் பி.ஏ.5 கொரோனா திரிபு தற்போது மிக வேகமாக பரவுவதால், அது நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலையையோ, அதீத கொரோனா பரவலையோ ஏற்படுத்தலாம் எனக்கூறி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே அமெரிக்காவில் ஒமைக்ரான் திரிபின் உட்பிரிவான பிஏ.5 மிக அதிகம் பரவிவருகிறது. தற்போது பிஏ5 திரிபு கொரோனா, தடுப்பூசிக்கு கட்டுப்படுவதில்லை என்பதால் வெள்ளை மாளிகை சார்பில் `முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவருமே பின்பற்றவேண்டும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் பைடனின் கொரோனா கண்காணிப்பு மருத்துவக்குழுவிலுள்ள மருத்துவர் ஆஷிஷ் ஜா என்பவர் அளித்திருக்கும் பேட்டியில், “உங்களுக்கு இரு மாதங்களுக்கு முன்புதான் கொரோனா ஏற்பட்டிருந்தது என்றாலும்கூட, தற்போது மீண்டும் உங்களுக்கு கொரோனா ஏற்படலாம். இது தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று தெரிகிறது. ஆகவே தடுப்பூசி போட்டவர்களும், கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களின் நிலை இன்னும் சிக்கலுக்குள்ளானது. தடுப்பூசியும், பூஸ்டர் டோஸூம் எடுக்காதவர்கள், உடனடியாக தாமாக முன்வந்து அவற்றை போட்டுக்கொள்ளவும்.

உடல்நிலை சரியில்லை என்று தோன்றினால் உடனடியாக கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவும். பாசிடிவ் என்று தெரிந்தால், மருத்துவ வழிகாட்டுதல்களை ஸ்டிரிக்டாக பின்பற்றவும். பொது இடங்களில் மாஸ்க் அணிந்து அனைவரும் செல்லவும். இப்படி முன்னெச்சரிக்கையாக செயல்படுவதன்மூலம், தீவிர கொரோனா பரவலை இப்போதைக்கு நம்மால் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஐசியூ-வில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கையை குறைப்பது என்ற இலக்கை நோக்கி இப்போதே நாம் செல்லவேண்டும். அப்போதுதான் நம்மால் உயிர்சேதங்களை தவிர்க்க முடியும்” என்றுள்ளார்.

மேற்கொண்டு கொரோனா பிஏ5 திரிபு பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவில் இரண்டாவது பூஸ்டர் டோஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இது 50 வயதுக்குட்பட்டோருக்கானதாக இருக்குமென்று சொல்லப்படுகிறது.

இதுவே 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, நேரடி மருத்துவ ஆலோசனை - முதல் போஸ்டர் டோஸ் எடுக்க தொடர் பரிந்துரை - பாக்ஸ்லோவிட் (Paxlovid) தெரபி (எ) கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலம், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதமும், இறப்பு விகிதமும் குறையுமென்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

சமீபத்திய நியூயார்க் டைம்ஸின் தரவின்படி, தினந்தோறும் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியாவதாகவும், இது மிக குறுகிய அளவிலான எண்ணிக்கை மட்டுமே என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் பலர் வீட்டிலேயே சுய பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ளுதல் - மருத்துவரை அனுகுதல் என்று அமெரிக்காவில் இருக்கிறார்களாம். இதுபோன்ற சூழல் நிலவுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் கடந்த 2 வாரத்தில் 18% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே விரைந்து அமெரிக்கர்கள் இரண்டாவது டோஸ் பூஸ்டரை எடுத்துக்கொள்ள அறுவுறுத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது முதல் பூஸ்டர் டோஸூக்கே அமெரிக்காவில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது. ஆகவே முன்னெச்சரிக்கையை பின்பற்ற மட்டுமே திவிரமாக அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com