கொரோனாவால் ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு... அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை உறுதிசெய்ய உத்தரவு!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கொரோனா
கொரோனாPT

இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேர கணக்கின்படி இந்தியாவில் கொரோனாவால் 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 266 பேரும், கர்நாடகாவில் 70 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் 2 பேரும், ராஜஸ்தான், கர்நாடகாவை சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் 2 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த உத்தரவு!

இதனிடையே கொரோனா பரவலை அடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்னைகளுக்காக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம் என்றும், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையிருப்பு, ஐசியூ படுக்கைகள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்யவும் பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனை வளாகங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பாட்னா, கயா மற்றும் தர்பங்கா விமான நிலையங்களில் ரேண்டம் அடிப்படையில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பீகார் அரசு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பரவும் ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல். இருமல், அசதி, மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகள் தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை அதிகப்படுத்த உத்தரவிட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com