‘கொரோனா உறுதியான 236 பேரை காணவில்லை’ - ‘ஷாக்’ ஆன அதிகாரிகள்
திருப்பதி நகராட்சியில் கொரோனா பாதித்த 236 பேரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி நகராட்சியில் மட்டும் 2300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 236 பேரை காணவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் தகவறான முகவரி, தவறான செல்போன் எண்களை கொடுத்து விட்டு, தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா, காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில் கொரோனா பாதித்த 66 பெண்கள் உட்பட 236 பேரை காணவில்லை எனவும், இவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

