வீட்டிலேயே இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் ? எப்படி சமாளிப்பது ?

வீட்டிலேயே இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் ? எப்படி சமாளிப்பது ?

வீட்டிலேயே இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் ? எப்படி சமாளிப்பது ?
Published on

கொரோனா வைரஸ் பாதிப்பு இத்தகைய ஒரு சூழ்நிலையில் நம்மைக் கொண்டு வந்துவிடும் என்று இந்தியர்கள் யாரும் சில நாள்களுக்கு முன்பு கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்க மாட்டோம். கொரோனா வைரஸ் அச்சம் இப்போதுதான் இந்திய மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்க ஆரம்பித்துள்ளது எனக் கூறலாம். இத்தகைய சூழ்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உத்தரவிட்டார்.

மேலும், கொரோனாவை விரட்ட பொது மக்கள் அடுத்த 21 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். "நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் கொரோனா வீட்டுக்குள் வரும்" என எச்சரித்தார். அடுத்த 21 நாள்களை குடும்பத்துடன் செலவிட வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார். எப்போதும் பரபரப்பான வாழ்க்கைக்குப் பழகிய இப்போதைய மக்கள் எப்படி 21 நாள்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பார்கள் என்ற கேள்வி பொதுவாகவே எழும். இந்தக் கால கட்டத்தை எப்படிச் சமாளிப்பது என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கும்.

இந்தக் காலகட்டம் எப்படி இருக்கும் என்பதை மனநல மருத்துவர் ருத்ரன் தன்னுடைய "பேஸ்புக்" பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " வீட்டிலிருக்கும் போதும் கூட, உடன் இருப்பவர்களோடு பேசாமல் செல்பேசியிலேயே காலம் கழித்தவர்களுக்குக் கூட இந்த மூன்று வார முடக்கம் அவ்வளவு சுலபமாக இருக்காது. இந்த மூன்று வாரத்தில் நாம் பயனுள்ள சுவையான வகைகளில் நம் நேரத்தைச் செலவிடலாம் என்பதே எல்லார்க்கும் முதலில் தோன்றும். முதல் வாரம் படம் பார்த்து, படித்து புதியதாய் ஏதாவது வீட்டிலிருந்தபடியே செய்வது என்பது ஓரளவுக்குச் சரியாகப் போய்விடும்"

அடுத்து " இரண்டாம் வாரம் கொஞ்சம் சலிப்பும் எரிச்சலும் வரும். வீட்டுக்குள்ளேயே ஒருவரையொருவர் குற்றம் காண்பது அதிகரிக்கும். வெளியே போக ஏக்கமும் பரபரப்பும் வரும். இதையும் தாங்கிக் கொள்ளலாம். மூன்றாவது வாரத்தில் தளர்வும் சோர்வும் வரும். ஏதும் செய்ய மனத்தில் ஈடுபாடு வராது. பிடித்த காரியங்கள் என்று நாம் நினைத்த படம் பார்ப்பது, இசை கேட்பது கூட அவ்வளவாகச் செய்யத் தோன்றாது. இது மனச்சோர்வின் அறிகுறி என்றாலும் இதற்கு உடனடியாய் மனநல மருத்துவ உதவி தேவைப்படாது."

முக்கியமாகக் கடைசி வாரம் " ஆனால், இப்போதைய முடக்கம், இன்றைய உலக நிலவரத்தை நோக்கினால், நான்கு வாரங்களோ ஆறு வாரங்களோ நீடிக்கலாம் என்பதால், மனம் சோர்வடையாமல் இருக்கத் தினசரிக்கு ஓர் அட்டவணை அவசியம். பிடித்த காரியங்களை முதல் வாரத்திலேயே முழுமூச்சாய் இடைவிடாமல் செய்து சலிப்பதை விடத் தினமும் இந்த நேரம் படிக்க, இந்த நேரம் படம் பார்க்க என்று ஒதுக்கிக் கொண்டால் நான்கு வாரங்களைக் கடப்பது கடினம் என்றாலும் சாத்தியம்.

மிக மிக முக்கியமாக கொரோனா குறித்த செய்திகளையும் பொய்களையும் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து விட்டு அதற்கென்று கொஞ்ச நேரம் மட்டும் ஒதுக்குவது மனநலத்திற்கு உதவும்" என டிபஸ் கொடுத்து இருக்கிறார் டாக்டர் ருத்ரன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com