100% மக்களுக்கும் தடுப்பூசி: அசத்திய ‘முள்ளூர்’ ஊராட்சி!

100% மக்களுக்கும் தடுப்பூசி: அசத்திய ‘முள்ளூர்’ ஊராட்சி!
100% மக்களுக்கும் தடுப்பூசி: அசத்திய  ‘முள்ளூர்’ ஊராட்சி!

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட 12 குக்கிராமங்களை சேர்ந்த 100 சதவிகித மக்களும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்று அசத்தியுள்ளனர். இதன்மூலம், 100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊராட்சியாக முள்ளூர் ஊராட்சி மாறியுள்ளது. மூள்ளூரை போலவே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 20 ஊராட்சிகளிலுள்ள 100 சதவிகித மக்களும் தங்களின் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னும் மீதமிருக்கும் ஒரு சில ஊராட்சிகளை சேர்ந்த மக்களும் 100% தடுப்பூசி செலுத்திக்கொண்டால், ‘100% பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழ்நாட்டின் முதல் மாவட்டம்’ என்ற பெருமையை புதுக்கோட்டை பெறக்கூடும்.

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு, மெல்ல மெல்ல தீவிரமடைந்து முதல் அலை, இரண்டாம் அலை என தொடர்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும் நிலையில், அதனை செலுத்திக் கொள்ள பெரும்பாலானோர் தயக்கம் காட்டும் நிலையும் உள்ளது. இருப்பினும் அரசின் விழிப்புணர்வுகளினால், தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் தற்போது நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட சிக்கல்களையெல்லாம் கடந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மற்றும் பொதுமக்களின் ஆர்வமே காரணமாக அமைந்துள்ளது என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே உள்ளது, முள்ளூர் என்ற ஊராட்சி. இந்த ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட 4,856 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சுகாதாரத் துறையால் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு, 12 குக்கிராமங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை குக்கிராமங்களிருக்கும் முள்ளூர் ஊராட்சியை சேர்ந்த 100% மக்களும் தங்களின் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தளவுக்கு மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு கிடைக்க, ஊராட்சி தலைவர் ஆதிஸ்வரனின் முயற்சியும் அந்த கிராம மக்களின் ஒத்துழைப்பும் தான் காரணம் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

கொரோனோ தடுப்பூசி செலுத்தி கொள்வதில் முள்ளூர் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதால், அங்கு மட்டுமே ஏழு முறை தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அக்கிராம மக்கள் அனைவரும் இந்தியாவின் பிற கிராம மக்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர் என்றும் இதேபோல் இந்தியாவின் மற்ற கிராம மக்களும் ஒத்துழைப்பும் ஆர்வம் காட்டினால், எளிதில் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி விடலாம் என்றும் சுகாதாரத்துறையினர் நெகிழ்வோடு கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முள்ளூர் உட்பட்ட 20 ஊராட்சிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.

- செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com