கேரளாவில் 105 வயதான மூதாட்டி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்பது நாட்களில் தொற்றிலிருந்து மீண்டு நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் ஜூலை 20-ஆம் தேதி, 105 வயதான மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் இருமல் காணப்பட்டதுடன் தொற்றும் உறுதி செய்யப்பட்டது.
அந்த மூதாட்டிக்கு வயது சம்பந்தப்பட்ட குறைபாடுகளும் இருந்தபடியால் அவரை சிறப்பு மருத்துவ கண்காணிப்பில் வைத்தனர். நேற்று மீண்டும் சோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்ததை பார்த்து மருத்துவர்களும் மருத்துவமனையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இப்போது மீண்டும் 7 நாட்கள் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த ஒன்பது நாட்களில் அவருக்கு மூச்சு விடுவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை எனவும், விரைவில் குணமாக நோயாளியின் உடல் வலிமையோடு மன வலிமையும் மிகவும் அவசியம் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நசீம் கூறியிருக்கிறார்.
105 வயது மூதாட்டியை குணமாக்கியதற்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா மருத்துவ கல்லூரிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கேரளாவில் நேற்று 30 சுகாதாரத் துறை ஊழியர்கள் உட்பட 903 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21, 797 பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.