’அனைத்து வகை வைரஸ்களுக்குமான தடுப்பூசி’- மருத்துவ நிபுணர் குழு தகவல்
அடுத்த தலைமுறை கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இந்தியாவின் முன்னணி மருத்துவ நிபுணர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று முடிவில்லாமல் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரம் காட்டி வருவதாக தேசிய நோய்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக் கொள்ளும் போக்கை நிறுத்தும் வகையில், அடுத்த தலைமுறை தடுப்பூசிகள் உருவாகி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரும் வைரஸ்களில் இருந்தும் மக்களை நீண்ட காலத்திற்கு காப்பாற்றும் வகையில் அந்த தடுப்பூசிகள் வீரியமிக்கதாக உருவாகி வருகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு சில மருந்து நிறுவனங்கள் குறிப்பிட்ட வைரஸ்களை அழிப்பதற்கும், சில நிறுவனங்கள் இருவேறு வகையான வைரஸ்களை அழிப்பதற்கும், இன்னும் சில நிறுவனங்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கலவையான வைரஸ்களை அழிப்பதற்கும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய மருந்து நிறுவனங்கள் இதனை சவாலாக ஏற்று களத்தில் இறங்கியிருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் தொடர்பான தகவல்கள் நமக்கு கிடைக்க வரும் என்றும் அரோரா தெரிவித்துள்ளார்.