புதிதான ஒரு களத்திற்கு அழைத்துச் செல்லும் ‘அயலி’ -வித்தியாசமான முயற்சியில் கவனம் ஈர்த்ததா?

புதிதான ஒரு களத்திற்கு அழைத்துச் செல்லும் ‘அயலி’ -வித்தியாசமான முயற்சியில் கவனம் ஈர்த்ததா?
புதிதான ஒரு களத்திற்கு அழைத்துச் செல்லும் ‘அயலி’ -வித்தியாசமான முயற்சியில் கவனம் ஈர்த்ததா?

தொடர்ச்சியாக த்ரில்லர், கொலை, கொள்ளை என நம் மேல் ரத்தம் தெறிக்கும் படியான கண்டெண்ட்களைத் தந்து கொண்டிருக்கும் வெப் சீரிஸ் உலகில், புதிதான ஒரு களத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறது ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் ‘அயலி’.

உலகின் பல மொழி சினிமாக்களில் Utopian and dystopian fiction என்ற ஒரு வகைமை உண்டு. நிகழ்கால பிரச்சனைகளை மையமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கதையைச் சொல்லும் வடிவம் அது. அதன் ரிவர்ஸ் வடிவமாக, ‘அயலி’-ஐ எடுத்துக் கொள்ளலாம். இப்போது வரை இருக்கும் பெண்களுக்கு பிரச்சனையை பற்றி, கடந்த காலத்தில் களம் அமைத்து பேசியிருக்கிறது. அது இரு காலகட்டத்திலும் பொதுவாய் அமைந்திருக்கிறது என்ற சமூக அவலத்தையே எடுத்துப் பேசுகிறது இந்த சீரிஸ்.

நூற்றாண்டுகளுக்கு முன் ஊரின் காவல் தெய்வம் அயலியின் கோபத்தால் நிகழ்ந்ததாக சொல்லப்படும் பாதிப்புகளுக்குப் பின், வீரப்பண்ணை கிராமத்து மக்கள் ஒரு ஊர் கட்டுப்பாட்டை கொண்டு வருகிறார்கள். அந்த ஊரில் ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன், அவளுக்குத் திருமணம் செய்வது என்பதுதான் அந்தக் கட்டுப்பாடு. அதே வீரப்பண்ணை கிராமத்தில் வசிக்கும் தமிழ்ச்செல்வி (அபி)க்கு நன்றாக படித்து, மருத்துவர் ஆக வேண்டும் என்பது கனவு.

ஆனால் ஊர் கட்டுப்பாடுகளின் படி, வயதுக்கு வந்தால் கல்விக்கு தடைப்போட்டு, உடனடியாக கல்யாணம் செய்துவிடுவார்களே என்ற பயத்தோடே இருக்கிறாள். பயந்தது போலவே ஒரு நாள் வயதுக்கு வந்துவிடுகிறாள். ஆனால் வெளியில் சொன்னால் தனது கல்வித் தடைபடும் என அந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் மறைக்கிறாள். தொடர்ந்து பள்ளி செல்கிறாள். இதன் பிறகு அவள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? அதன் மூலம் ஊருக்குள் வெடிக்கும் பிரச்சனைகள் என்ன? என்பதே மீதிக்கதை.

இந்த சீரிஸின் முதல் பலமே மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் கதைதான். மேலோட்டமாக பார்த்தால், பெண் கல்விக்கு தடையாக இருக்கும் பிற்போக்குத் தனங்களைப் பற்றி பேசும் ஒரு நகைச்சுவைக் கதையாக இருக்கும். ஆனால், அதற்குள்ளே இருக்கும் அடிமைத் தனம், பெண்களை புனித பிம்பங்களாக கட்டமைத்திருக்கும் சமூக மனநிலை, அடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவாக நிற்கும் மனநிலை, சாதிய அடக்குமுறை, கடவுளைக் காரணம் காட்டி ஒரு கூட்டத்தையே சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் தந்திரக்காரர்கள் என பலரையும் பற்றி விரிவாக பேசுகிறது. இதை சாத்தியமாக்கியிருப்பது இயக்குநர் முத்துக்குமாரின் இயக்கம்.

வெப் சீரிஸ் எடுக்கப்படும்போது ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் ஒரு cliffhanger moment இருக்கும் படியே உருவாக்கப்படும். எனவே அடுத்த எபிசோடைப் பார்க்கும் ஆர்வத்தை ஒவ்வொரு எபிசோடின் முடிவும் கொடுக்கும். ஆனால் இந்த சீரிஸில் அதை வேறு விதமாக அணுகியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு எபிசோடையும் ஒரு கதையில் சின்ன பகுதியாகப் பிரித்து, அதனை முழுமையுடன் கொடுத்திருக்கிறார்கள் திரைக்கதை எழுதியிருக்கும் சச்சின், வீணை மைந்தன்.

மேலும் இதுபோன்ற சமூகப் பிரச்சனையை எடுத்து சொல்லும் கதைக்கு வலு கொடுப்பது வசனங்கள். அப்படி பல இடங்களில் ரசிக்க வைக்கிறது சச்சின், வீணை மைந்தன், முத்துக்குமாரின் வசனங்கள். “ஏண்டா உங்க ஊர் மானத்த எப்பவும் பொம்பளைகிட்டயே குடுக்குறீங்க” என்பது, ”எல்லாம் உங்கள பாதுகாப்பா வெச்சுக்க தான பண்றோம்” என ஊர் தலைவரின் மகன் சொல்லும் போது, “அவ்வளோ கஷ்ட்டப்பட்டு எங்கள பாதுகாக்க தேவை இல்ல. எங்கள பாத்துக்க எங்களுக்குத் தெரியும்” என சொல்வது என்று பல இடங்களில் பளிச் வசனங்கள். ஒரு பக்கம் காட்டமான வசனங்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த ஊருக்கே உரிய ஒரு நகைச்சுவையையும் வசனத்தில் குடுத்திருப்பதும் ரசிக்க வைக்கிறது.

கதையின் முதன்மைக் கதாபாத்திரம் தமிழாக நடித்திருக்கும் அபி மிகக் கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கதையின் மையமே அவர் தான் என்பதால், மொத்தக் களத்தையும் தனது நடிப்பால் தாங்கியிருக்கிறார். அவரது அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல் இயல்பான ஒரு கிராமத்து வாசியாகவே தோன்றுகிறார். சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருப்பதில் லேசாக மலையாள நெடி இருந்தாலும், அது எந்த விதத்திலும் உறுத்தலாக இல்லை. இவர்கள் தவிர ‘அருவி’ மதன், சிங்கம்புலி, லிங்கா என பலரும் சிறப்பு. ஜென்சன் நடித்திருக்கும் அந்தக் கதாபாத்திரம் வரும் காட்சிகள் அனைத்தும் ரகளை ரகம்.

இந்த சீரிஸுக்கு தனது பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் உயிரூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ரேவா. கணேஷ் சிவாவின் எடிட்டிங்கும் பல இடங்களில் காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துகிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கிராமத்திற்கு ஏற்றது போன்ற ஒரு கலர் டோன் பிடித்ததில் இருந்து சில நுணுக்கமான ஃப்ரேம்ஸ் வரை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறது.

இந்த சீரிஸில் குறைகளும் இல்லாமல் இல்லை. சில காட்சிகள் நேரடியாக கதைக்குத் தொடர்பில்லாதது போல இருந்தது. உதாரணமாக ஜென்சனை போலீஸ் பிடிப்பதற்காக வரும் காட்சிக்கு கதையுடன் நேரடியாக தொடர்பிருக்காது. ஆனால், இதே சீரிஸில் இரண்டு பாட்டிகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவை கூட கதைக்கு நேரடியாகத் தொடர்பில்லாதது தான்.

ஆனால் அந்தக் காட்சிகள் சிரிக்க வைப்பதும், ஒரிடத்தில் நெகிழ வைப்பதும் என துவக்கம் முடிவு என எல்லாம் சேர்த்து தனியாக எடுத்து அந்தக் காட்சிகளை அடுக்கினால் ஒரு அழகான குறும்படம் போல் இருக்கும். அந்த அளவு தாக்கம் மற்ற காட்சிகளிலும் இருந்திருக்கலாம். இன்னொன்று படம் நிகழும் கால இடைவெளி. இரண்டு வருட இடைவெளிக்குள் எப்படி மைதியி கதாபாத்திரத்தின் வாழ்வில் இவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கிறது? இதுபோன்ற சில குறைகளும் இருக்கிறதுதான்.

இதுபோன்ற சின்ன குறைகளை ஓரம் வைத்துவிடலாம் என்ற அளவிலானவை தான். மற்றபடி தமிழில் வெளியான மிகச் சில நல்ல வெப் சீரிஸில் முக்கியமான இடத்தைக் கண்டிப்பாக 'அயலி'க்கு கொடுக்கலாம். நிச்சயமாக குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் கூடிய, சிரிக்க வைக்கும், நெகிழ வைக்கும், சிந்திக்கவும் வைக்கும் ஒரு சீரிஸ் இந்த 'அயலி'!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com