வரவேற்பை பெற்றிருக்கும் ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சர்வைவர்' தொடர்
ZEE தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமபா, டான்ஸ் ஜோடி டான்ஸ், ராக்ஸ்டார் போன்ற ரியாலிட்டி தொடர்கள் வரிசையில் இணைந்துள்ளது, தமிழ் திரைப்பட உலகின் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரான அர்ஜூன் தொகுத்து வழங்கும் சர்வைவர். சர்வதேச அளவில் புகழ் பெற்ற ரியாலிட்டி தொடரை தமிழ் ரசிகர்கள் விரும்பும் வகையில் வடிவமைத்து பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இத்தொடரில் நடிகர்கள் விக்ராந்த், நந்தா, உமாபதி ராமையா, பெசன்ட் ரவி, விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி மற்றும் சின்னத்திரை தொகுப்பாளர் பார்வதி ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர்.
வழக்கமான ரியாலிட்டி தொடர்களைப் போல் அல்லாமல் அடர்ந்த வனப்பகுதியில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் இலக்குகளை அடைய வேண்டும். போட்டியாளர்களின் உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கும் வகையிலான இலக்குகள், இதுவரை ரசிகர்கள் காணாத இயற்கை எழில் நிறைந்த வனப்பகுதி போன்றவை ஓரிரு நாள்களிலேயே நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளதாக ஸீ தொலைக்காட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.