‘கிங் ஆஃப் பிஜிஎம்’ - யுவனின் 23 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் ரசிகர்கள்..!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகின் தனித்துவனமான அடையாளம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. காதல் ரசம் கலந்து இவர் அமைத்த பாடல்கள் தமிழ் சினிமாவில் தனி ரகமாக ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்தது. 1997 ஆம் ஆண்டு பிப்ரவர் மாதம் 28 ஆம் தேதி வெளியான ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார் யுவன். அவரது அப்பா இளையராஜா ஆதிக்கம் நிறைந்த சினிமா உலகத்தில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை அவர் ஏற்படுத்துவாரா? என மிகப் பெரிய சந்தேகம் அப்போது முன் வைக்கப்பட்டது.
மாபெரும் ஆலமரமாக இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை சாதனையை மீறி தனக்கு என ஒரு பாணியை யுவன் தாங்கிப் பிடிக்க அவர் பல முயற்சிகளை செய்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். பின்னணி இசையில் அவர் தனி முத்திரையும் பதித்தார். குறிப்பாக தமிழ் சினிமா இசை உலகில் யுவன் ஒரு ட்ரெண்ட் செண்ட்டர் ஆக தன்னை தக்க வைத்து கொண்டார் என்பதே 23 ஆண்டு கால தொடர் பயணத்தின் அடையாளம். அதற்காக அவரது ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி ட்விட்டரில் #23YearsofYuvanism என ஹேஷ் டெக் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பல இயக்குநர்களும் அவரை இதே ஹேஷ்டேக்கில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த யுவனின் பிஜிஎம் இசைக் கோர்வையை குறிப்பிட்டும் எழுதி வருகின்றனர். பலர் ‘கிங் ஆஃப் பிஜிஎம்’ என எழுதி வருகிறார்கள். ‘யூத் ஐகான்’ என்றும் குறிப்பிட்டு சிலர் எழுதி உள்ளனர். இவரும் செல்வராகவனும் சேர்ந்து கூட்டணி அமைத்த பல படங்கள் இசையளவில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ‘பில்லா’வில் யுவனின் இசையும் ‘மங்காத்தா’வில் இவரது பிஜிஎம் இசை கோர்வையையும் பலரது மனதை ஈர்த்திருந்தது.
இவரது இசைக்கு இருக்கும் ரசிகர்களைப் போலவே இவரது குரலுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். அதுவும் யுவன் பாடும் காதல் பாடல்கள் தமிழ் திரையுலகில் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இவர் திரைத்துறைக்கு வந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், இன்னும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படத்திற்கு இவர் இதுவரை இசையமைக்கவில்லை. அது இனி வரப்போகும் 25 ஆண்டு கால கொண்டாட்டத்திற்குள் நிறைவேறிவிடும் என்றும் அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு வாழ்த்தி வருகிறார்கள்.
தற்போது யுவன் சங்கர் ராஜா, அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.