
திமுக தலைவர் கருணாநிதி மிகப்பெரிய ஆளுமை கொண்டவர் இளைஞர்களெல்லாம் சுறுசுறுப்பை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக் கூறியது " அரசியல்வாதி மட்டுமின்றி நல்ல கலைஞர், புலவர் என பன்முகம் கொண்டவர் விரைவில் அவர் நலம் பெற வேண்டும். நேரில் பார்க்கும் சூழல் இல்லாததால் இன்னும் சந்திக்க செல்லவில்லை.காவிரியை இயற்கை நமக்கு கொடுத்திருக்கிறது. வரும் நீரை வீணடிக்காமல் சேமித்து வைக்க வேண்டும். ரஜினி, கமல் அரசியலைப் பொறுத்தவரை நான் பொது மக்களாகவே இருக்கிறேன் தனியார் பள்ளிகளில் மட்டும்தான் நல்ல கல்வி கிடைக்கும் என்றில்லை. அரசுப் பள்ளிகளிலும் நல்ல கல்வி சூழல் வழங்கப்படுகிறது" என கூறியுள்ளார்.