பாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி..!

பாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி..!
பாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி..!

நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் உங்களது மூளை ஒரு சொல்லை உங்கள் தாய்மொழி கொண்டே புரிந்து கொள்ளும். இன்று சர்வதேச தாய்மொழி தினம். இந்நாளில் பாடலாசிரியர் மதன் கார்க்கி உருவாக்கியிருக்கும் புதிய மொழியொன்றின் எழுத்துரு உலகிற்கு அறிமுகமாகிறது. மதன் கார்க்கி தன்னுடைய கல்லூரி காலம் தொட்டே புதிய மொழியொன்றை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்.

2015’ஆம் ஆண்டு உருவான பாகுபலியில் தான் அது சாத்தியமானது. பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படம் பாகுபலி. அப்படத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்தில் காளகேயர்கள் என்ற போரிடும் குழுவானது கிளிகி என்ற மொழியினைப் பேசியிருப்பார்கள். ஆதி வாசிகளின் மொழி போல இருக்கும் அதன் ஒலி வடிவத்தை அப்படத்திற்காக வடிவமைத்துக் கொடுத்தவர் மதன் கார்க்கி. அதன் தொடர்ச்சியாக., தான் உருவாக்கிய அம்மொழிக்கு எழுத்துருக்களை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அவர்.

தற்போது கிளிகி என்ற அம்மொழி எழுத்துவடிவம் பெற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கிளிகி மொழிக்கென பிரத்யேக இணைய தளமொன்றையும் ‘கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்’ உருவாக்கியிருக்கிறது. உலக தாய்மொழி தினமான இன்று அதனை பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டிருக்கிறார். தான் உருவாக்கிய கிளிகி மொழி பற்றி கூறும் மதன் கார்க்கி “இம்மொழியினை கற்றுக் கொள்வது மிகவும் சுலபம், 2 நிமிடத்தில் கிளிகி மொழியின் எண்களை கற்றுக் கொள்ள முடியும். மொத்த மொழியினையும் இரண்டே மணி நேரத்தில் ஒருவர் கற்றுத்தேற முடியும்” என்றார். மேலும், கிளிகி மொழியின் இலக்கணமும் மிகவும் எளிமையாகவே வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நூறு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுக்க 7000 மொழிகள் வரை புழக்கத்தில் இருந்ததாகவும் தற்போது 3000 மொழிகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் மதன் கார்க்கி இவ்வுலகிற்கு புதிய மொழியொன்றை உருவாக்கித் தந்திருப்பது பாராட்டுக்குறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com