பிரபல தெலுங்கு இயக்குநரின் படத்தில் இணைந்த யோகிபாபு! | Yogi Babu | AK47 | Venkatesh
திரிவிக்ரம் மற்றும் வெங்கடேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்தார் யோகிபாபு. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. காமெடி நிகழ்ச்சியான `லொள்ளு சபா' மூலம் பிரபலமான பாபு, 2009ல் அமீர் நடித்த `யோகி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் யோகி பாபு ஆனார்.
பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து ஈர்த்தவர், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஷாரூக்கானின் `சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமானார். மலையாளத்தில் `Guruvayoor Ambalanadayil' படம் மூலமும், கன்னடத்தில் `Mark' படம் மூலமும் அறிமுகமானார். தெலுங்கில் `Jai Hind 2', `Kaki: Sound of Warning', `Gurram Paapi Reddy', `Couple Friendly' போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்து வரும் `Aadarsha Kutumbam House No: 47' படத்தில் ஒரு முக்கிய பார்த்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார்.
இப்படத்தில் தெலுங்கு காமெடி நடிகர் சத்யாவும் நடிக்கும் நிலையில், இப்படத்தில் யோகிபாபுவும் இணைந்துள்ளார். ஏற்கெனவே, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகின்றது. தெலுங்கில் முன்னணி இயக்குநரான திரிவிக்ரம் எழுத்தாளராக பணியாற்றிய போது வெங்கடேஷ் நடித்த `Nuvvu Naaku Nachav' படத்தின் கதை, Vasu படத்தின் வசனம் எழுதி இருந்தாலும், திரிவிக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பது இதுவே முதன் முறை. எனவே இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

