‘சதுரங்க வேட்டை 2’, ‘எண்ணித் துணிக’ ரிலீஸ் தேதி அறிவிப்பு - ஓடிடியில் வெளியாகும் ‘வட்டம்’
தமிழ் திரையுலகில் கொரோனா காரணமாக பல படங்கள் வெளியாகாமல் இருந்தநிலையில், தற்போது அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, அரவிந்த் சாமியின் ‘சதுரங்க வேட்டை 2’, ஜெய்யின் ‘எண்ணித் துணிக’ படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிமுக இயக்குநர் எஸ்.கே. வெற்றிசெல்வன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லலாக உருவாகியுள்ள திரைப்படம் ‘எண்ணித் துணிக’. இந்தப் படத்தில் ஜெய், அதுல்யா ரவி நடித்துள்ளனர். ‘கேப்மாரி’ படத்திற்குப் பிறகு, ஜெய் மற்றும் அதுல்யா ரவி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்தும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த ‘சதுரங்க வேட்டை 2’ படம், வருகிற அக்டோபர் 7-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஹெச். வினோத்தின் கதை மற்றும் இயக்கத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, திரிஷா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, இந்திரஜித் சுகுமாறன், நாசர், ராதாரவி, ஸ்ரீமன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘சலீம்’ பட இயக்குநர் நிர்மல் இயக்கியுள்ளார். ஹெச். வினோத் கதை எழுதியுள்ளார். அஸ்வமித்ரா இசைமையத்துள்ளார்.
இதேபோல் கமலக்கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளப் படம் ‘வட்டம்’. சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, மஞ்சிமா மோகன், சமுத்திரக்கனி, நட்டி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது. 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்தப் படம் விரைவில் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.