தமிழ் சினிமாவில் இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கலக்கிய டாப் 10 தமிழ் படங்கள் #2022Rewind

தமிழ் சினிமாவில் இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கலக்கிய டாப் 10 தமிழ் படங்கள் #2022Rewind
தமிழ் சினிமாவில் இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கலக்கிய டாப் 10 தமிழ் படங்கள் #2022Rewind

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு 2022-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களின் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை நம்பிக்கையுடன் பல திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜூன் மாதத்திற்குப் பிறகு ஏராளமான படங்கள் திரையரங்கை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் தமிழ் சினிமா குறித்த செய்திகளை பார்த்து வரும் நிலையில், இன்று இந்தாண்டு அதிக வசூல் வேட்டை நடத்தியப் படங்கள் குறித்துப் பார்க்கலாம்.

1. பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதேபெயரில் பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கினார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லஷ்மி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ரஹ்மான் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் சுமார் 500 கோடி வரை வசூலித்து, இந்த வருடம் அதிக வசூலித்தப் படங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

2. விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்து, கமல் நடித்த திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் 447.65 கோடி ரூபாய் வரை வசூலித்து, இந்தாண்டு வெளியாகி அதிக வசூலித்தப் படங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

3. பீஸ்ட்

‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், வி.டி.வி. கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், 237.05 கோடி ரூபாய் வசூலித்து இந்தாண்டில் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் வசூலில் 3-ம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

4. வலிமை

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இணைந்திருந்தப் படம் ‘வலிமை’. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், குடும்ப செண்டிமெண்ட் மற்றும் போதைப்பொருள் கடத்தல், தொடர் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கும் எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தாலும், 200.25 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 4-ம் இடம் பிடித்துள்ளது.

5. எதற்கும் துணிந்தவன்

சூர்யா, பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், சூரி, இளவரசு, ஜெயப்பிரகாஷ், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டு இருந்தது.

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், சுமார் 179 கோடி ரூபாய் வசூலித்தது. எனினும், இந்தப் படத்தை விட, நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘விக்ரம்’ படம்தான் அவருக்கு மாஸாக அமைந்தது. ‘விக்ரம்’ மாபெரும் வெற்றிக்கு சூர்யாவும் முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

6. டான்

சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில், கடந்த மே மாதம் 13-ம் தேதி வெளியான திரைப்படம், ‘டான்’. எதிர்பார்ப்பை மீறி ‘டாக்டர்’ படம் வெற்றியை பெற்றதைப் போன்றே, ‘டான்’ படமும் சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படம் 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

7. திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 4-வது முறையாக கூட்டணி அமைத்து நடித்திருந்த படம் ‘திருச்சிற்றம்பலம்’. காதல், பாசம், கோபம், தந்தை - மகன் உறவு, தாத்தா - பேரன் உறவு, ஆண் - பெண் நட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததால், இந்தப் படம் எதிர்பார்த்ததைவிட வரவேற்பு பெற்று சுமார் 110 கோடி ரூபாய் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8. சர்தார்

கார்த்தி, லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, சங்கி பாண்டே உள்பட பலர் நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தண்ணீரை வைத்து நடக்கும் முறைகேடு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருந்தது ‘சர்தார்’ திரைப்படம்.

கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனுடன் வெளியான சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தைக் காட்டிலும், நேர்மறையான விமர்சனங்களால் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

9. லவ் டுடே

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக தனது ‘App(A) Lock' என்ற குறும்படத்தை, ‘லவ் டுடே’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருந்தார். இந்தப் படத்தை இயக்கியது மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன்.

அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’, சுந்தர் சி-யின் ‘காஃபி வித் காதல்’ ஆகியப் படங்களுக்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியான இந்தப் படம், 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

10. வெந்து தணிந்தது காடு

நடிகர் சிம்பு - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் 3-வது முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கிய திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தில், சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்திருந்தார்.

மேலும் ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்தப் படம் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com