தள்ளிப்போகிறது யாஷ் நடித்துள்ள `டாக்ஸிக்'.. காரணம் இதுதான்! | Toxic | Yash
யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள படம் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. இதில் யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா எனப் பலரும் நடித்துள்ளனர். யாஷ் இதில் ராயா என்ற அப்பா ரோல் மற்றும் டிக்கெட் என்ற மகன் என இரு ரோலில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 19 வெளியாகும் எனச் சொல்லப்பட்ட நிலையில், தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இப்படம் தொடர்பான டீசர், பாடல் போன்றவை வெளியிடப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு உயர்ந்து வந்தது. கூடவே மார்ச் 8ஆம் தேதி பெங்களூருவில் நாடு முழுவதிலிருந்தும் ஊடகங்களை அழைத்து ஒரு பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இததொடர்பாக கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், " 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்குப் பிறகு, இந்தப் படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையச் செய்யும் நோக்கத்தைப் பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம். உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கெனவே கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்து விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்' படம் வெளியீடு தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் பிரச்னை காரணமாக தள்ளிப்போனது. இப்போது அதன் இன்னொரு பிரம்மாண்டமான படம் `டாக்ஸிக்' தள்ளிப்போகிறது. அதேசமயம், அந்த தேதியில் ரன்வீர் சிங் நடித்துள்ள `துரந்தர் 2' சோலோவாக வெளியாகவுள்ளது.

