யஷ் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
கர்நாடக நடிகர் யஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம் படம் மிகவும் மாஸ் ஆக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணி இசை, யஷின் நடிப்பு, வேகமான திரைக்கதை என அனைத்தும் மிரட்டலாக இருந்தது. தமிழிலும் இந்தப் படம் செக்கக் போடு போட்டது. இந்தப் படத்திற்கு என தமிழிலேயே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளனர். கேஜிஎஃப் படத்தின் வசனங்களும் மிகவும் பிரபலமானவை.
இதனையடுத்து, கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த பாகமும் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. அந்த போஸ்டரும் மாஸ் ஹீரோவுக்கான தன்மையில் மிரட்டலாக இருந்தது.
இந்நிலையில், இன்று கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. யஷ் பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குநர் பிரஷாந்த் நீல், இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘rock king star since 1986’ என்ற வாசகம் பின்புறத்தில் உள்ளது. நெருப்பு தெறிக்கும் பின் புலத்துடன் கையில் சுத்தியலுடன் கம்பீரமாக யஷ் நிற்கிறார்.
ஹிந்தி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிவரும் இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிகிறது.