‘பணம் தேவையில்லை... பயணமே போதும்’ : வாழ்வின் புதிய அர்த்தம் சொல்லும் ‘Into the wild’ 2007

‘பணம் தேவையில்லை... பயணமே போதும்’ : வாழ்வின் புதிய அர்த்தம் சொல்லும் ‘Into the wild’ 2007
‘பணம் தேவையில்லை... பயணமே போதும்’ : வாழ்வின் புதிய அர்த்தம் சொல்லும் ‘Into the wild’ 2007

உங்களுக்கு இனி விசா பாஸ்போர்ட் எதுவும் தேவை இல்லை எந்த தேசத்திற்கும் செல்லலாம், ரயில், விமானம், கப்பல் என எதிலும் நீங்கள் செலவின்றி பயணிக்கலாம். செல்லுமிடமெல்லாம் உங்களுக்கு உணவும் உறைவிடமும் கிடைக்கும் என்றால் நீங்கள் ஒரு தேசாந்திரியாகத்தான் உலவ நினைப்பீர்கள். ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலும் பொருளாதார நிர்ப்பந்தங்களும் நம்மை அப்படியொரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கவில்லை. மாறாக அது நம்மை ஒரு சுவர்க்கடிகாரத்தின் முட்கள் போல இயங்கச் செய்கிறது.

அதனால் தான் வருடத்துக்கு ஒரு முறையாவது, “எங்கயாவது வெளியூர் சுத்திப் பாக்கப் போலாமா” என்கிறான் ஒரு சம்சாரி. நம்முள் இன்னும் அந்த ஆதி நாடோடியின் மரபணு உயிர்ப்புடன் தான் உலவித் திரிகிறது. மார்க்கோபோலோ, அல்பெரூனி, அல்பெர்க்யூ, யுவான்சுவாங், இபின் பதூதா போன்ற பலரும் பயணத்தின் மீது தீரா போதை கொண்டு திரிந்தவர்கள் தானே.

அதுபோல நம் சமகாலத்தில் வெகு சமீபத்தில் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு நாடோடி இளைஞன் Christopher Johnson McCandless (February 12, 1968 – August 1992) பற்றிய உண்மைக் கதை தான் “into the wild” எனும் திரைப்படம். 24 வருடங்களே வாழ்ந்த அந்த இளைஞன் தன் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, கூடுவிட்டு பறக்கும் பறவை போல தன் குடும்பம் சுற்றம் என அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறான். தனது அடையாளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு தன்னிடம் சேமிப்பிலிருந்த சில ஆயிரம் டாலர் பணத்தையும் கூட ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டு., கொஞ்சம் உணவுப் பொட்டலங்கள் சில மாற்று உடைகள் இவற்றுடன் அலாஸ்கா நோக்கிப் பயணிக்கிறான் Christopher Johnson McCandless.

சுமார் 4 மாதங்களுக்குப்பின் அவன் சிதிலமடைந்த ஒரு பேருந்தினுள் சடலமாகக் கிடைக்கிறான். Christopher Johnson McCandless எழுதி வைத்திருந்த பயணக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1996-ல் jon krakauer “into the Wild” என்ற புத்தகத்தை எழுதினார். அப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு 2007-ல் இயக்குநர் sean penn “into the Wild” என அதே பெயரில் சினிமா வடிவமாக்குகிறார். Christopher Johnson McCandless கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் Emile Hirsch ஒரு துரு துரு நாயகன்.

தன் முதுகில் அடிப்படைத் தேவைக்கான சில பொருள்களோடு துப்பாக்கி ஒன்றையும் எடுத்துச்செல்கிறான். அற்புத திரைக்கதைக்கு மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் sean penn தத்துவார்த்த ரீதியாக சில கருத்துக்களை முன்வைக்கிறார். குடும்பம் என்ற கட்டமைப்பை உடைக்க முயல்கிறார் அவர். ஒரு காட்சியில் கையில் இருக்கும் பணத்தை தீயிலிட்டு எரிக்கும் நாயகன் “இது அபாயமானது, பணம் எனக்குத் தேவை இல்லை” என்கிறான். அதிகார மாயை பற்றிப் பேசுகிறான். திடீரென எதிர்த் திசை நோக்கி மலை மீதேறும் ஒரு ஆறு போல என வர்ணிக்கப்படுகிறது அவனது பயணம்.

தன் பயணங்களின் போது தன் பெயரை அலெக்சாண்டர் எனவும் தன்னை ஒரு விசித்திர நாடோடி எனவும் அறிமுகம் செய்துகொள்கிறான் நாயகன். ஆங்காங்கே கூடாரமிட்டு கிடைக்கும் உணவை, கொடுக்கும் மனிதர்களை ஒட்டி தன் பயணத்தை முன்னெடுத்துச்செல்லும் நாயகன் Emile Hirsch தன் விருப்பப்படி  அலாஸ்காவின் பனிக்காலத்தினுள் நுழைகிறான். அதிசயமாக அவனுக்கே காத்திருந்தது போலவே அங்கு இயங்காத நிலையில் இருக்கும் ஒரு பேருந்து அவனுக்கு கிடைக்கிறது. அதை தன் வேட்டைக்கான கூடாரமாக அமைத்துக் கொண்டு அப்பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகளைத் துப்பாக்கியால் வேட்டையாடி உணவாக்கி உண்டு வாழ்கிறான்.

தான் ஒரு தத்துவ வாழ்க்கையை வாழ்வதாகவும் தான் இயற்கையோடு மெல்ல இணைந்து கொண்டிருப்பதாகவும் மகிழும் நாயகன் சுமார் நான்கு மாதங்கள் அங்குத் தாக்குப்பிடிக்கிறான். ஒரு கட்டத்தில் பனிக்காலம் மாறி வெயில் காலம் துவங்குகிறது. வெயிலின் உக்கிரத்தினால் அவன் கடந்து வந்த பனிப்பாதை ஒரு காட்டாறு போல மாறுகிறது அதை மீண்டும் அவன் கடக்க இயலாமல் முடங்கிவிடுகிறான். அவன் வேட்டையாட விலங்குகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தாலும் வேட்டையாடும் திராணி அப்போது அவனிடம் இல்லை. பருவநிலை மாற்றமும் அவனுக்குச் சாதகமாக இல்லாத நிலையில் கையில் கொண்டு வந்திருந்த வனம் பற்றிய புத்தகமொன்றில் காட்டு உருளை பற்றி இருக்கும் குறிப்பு கண்டு பசியில் அவ்விதைகளைத் தேடிக் கண்டறிந்து உண்கிறான். மெல்ல அவனைக் காலம் கைவிட ஆகஸ்ட் மாதம் 1992-ல் “மகிழ்ச்சி என்பது பகிர்தலின்றி வேறில்லை” என்ற தனது கடைசி குறிப்பை எழுதிவிட்டு உயிர் துறக்கிறான்.

உண்மையில் Christopher Johnson McCandless இறந்து சில வாரங்களுக்குப்பின் அதாவது செப்டம்பர் 6,1992-ல் அவனது உடலைக் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க மருத்துவத்துறை Christopher Johnson McCandless உயிரிழப்புக்கு பல்வேறு காரணிகள் இருக்கக்கூடும் அவற்றில் ஒன்றாக காட்டு உருளையின் விஷத்தன்மையும் இருக்கலாம் என்றது. எது எப்படி இருந்தாலும் தன் வாழ்க்கையை தன் விருப்பப்படி 24 வயதுக்குள் வாழ்ந்து மடிந்த Christopher Johnson McCandless ஒரு ஆச்சர்யம் தான்.

2007-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித்திரைப்படமான இது Golden Globe விருது உட்பட பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றது ஆஸ்கர் விருதுக்காக இரு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இத் திரைப்படம் நாம் வாழப்படாத வாழ்க்கை மீதொரு பொறாமையை ஏற்படுத்திவிடுகிறது. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com