ஏ.ஆர்.ரஹ்மானுடன் வேலை செய்ய ஆசை: ஜிமிக்கி கம்மல் பாடகர் பேட்டி
ஏ.ஆர்.ரஹ்மான் உடன் வேலை பார்க்க வேண்டும் என்பது தனது கனவு என ஜிமிக்கி கம்மல் பாடகர் ரஞ்சித் உன்னி கூறியுள்ளார்.
சமீபத்தில் யு டியூப் வலைதளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பாடல் ஜிமிக்கி கம்மல். அது யு டியூப்பில் 35 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்தப் பாடலுக்கு கல்லூரி ஆசிரியர்களும் மாணவிகளும் சேர்ந்து நடனம் ஆடியிருந்தனர். மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் இடம் பெற்றிருந்த அந்தப் பாடலுக்கு மாணவிகள் ஆடிய நடனத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு நடிகர் மோகன்லால் நன்றி சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை பாடியவர்தான் ரஞ்சித். அவர் ரஹ்மான் இசையில் பாடவேண்டும் என்பதே தன் கனவு என சொல்லியிருக்கிறார்.
மேலும் அவர், ரஹ்மான்தான் எனது உத்வேகம். அவரது பாடலில் எப்போதும் ஒரு சுறுசுறுப்பு இருக்கும். கூடவே மென்மையாகவும் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் அவருடன் வேலை செய்ய விருப்பமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கர்நாடக இசைத் துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து வருகிறார்.