விஜய்யின் ‘மாஸ்டர்‘ படம் பின்வாங்குமா?

விஜய்யின் ‘மாஸ்டர்‘ படம் பின்வாங்குமா?
விஜய்யின் ‘மாஸ்டர்‘ படம் பின்வாங்குமா?

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “மாஸ்டர்”. கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப்படம் தற்போது பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துடன் இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படமும் வெளியாக இருக்கிறது.

முன்னதாக 50 சதவீத பார்வைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முதல்வரிடம் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து முதல்வரும் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிட்டார்.

இதற்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருப்பது விதி மீறல் என மத்திய அரசும் கூறியது.

இந்நிலையில் மாஸ்டர் படமானது 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்படுமா? ஒரு வேளை 50 சதவீத பார்வையாளர்களுடன் மாஸ்டர் திரையிடப்பட்டால் படத்திற்கு கிடைக்கு வருமானம் எந்த வகையில் தடைப்படும், திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் படத்திற்கு அதிக வரவேற்பு அளிப்பது ஏன் என்பது தொடர்பான கேள்விகளை நியூஸ் டுடே பத்திரிகையாளர் பரத்திடம் முன்வைத்தோம்.

மாஸ்டர் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் அதிக வரவேற்பு அளிப்பதற்கான காரணம் என்ன?

மாஸ்டர் படமானது ஒரு உச்ச நட்சத்திரத்தின் திரைப்படம். கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமாவில் ஓடிடியின் ஆதிக்கமானது அதிகமானது. அதனைத்தொடர்ந்து திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தபோதும் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது மிகக் குறைவாகவே இருந்தது.

இதனால் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் பழக்கமானது நசுங்கிப் போனதோ என்ற ஐயம் இருக்கிறது. ஆகவே விஜய் போன்ற நடிகரின் படம் திரையரங்கில் வெளியாகும்போது, மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்புகின்றனர். மற்றொரு காரணம் படத்தின் வசூலானது எதிர்பார்ப்பதை விட அதிகமாக கிடைக்கும் என்பது.

அரசு ஒருவேளை 100 சதவீத பார்வையாளர்களை கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றால், மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறதா?

மாஸ்டர் படமானது ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியத் திரைப்படம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதன் வெளியீடு தள்ளிச் சென்று இந்தக் காலத்தை எட்டியிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்தக் காலமானது பொங்கல் விடுமுறை காலம்.

ஆகையால் மாஸ்டர் பட வெளியீட்டிற்கு இதை விட சிறப்பான காலம், வேறு எப்போது கிடைக்கும் என்பது தெரியாது. மாஸ்டர் படக்குழுவும் கிட்டத்தட்ட பட வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. ஆகையால் அரசு 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்தாலும் மாஸ்டர் படமானது திரையரங்கில் வெளியாகி விடும் என்பதே என்னுடைய கருத்து.

அப்படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு, அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் காட்சிகளை அதிகரிக்கவும், அதிகாலை மற்றும் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பார்கள்.

அந்த கோரிக்கைகள் மூலம் மாஸ்டர் படத்திற்கான முழு வசூலை, 50 சதவீத பார்வையாளர்கள் வைத்துக்கொண்டே திரையரங்கு உரிமையாளர்கள் பெற முயற்சிப்பர். எப்படி இருப்பினும் சாதரண காலங்களில் விஜய் படங்களுக்கு கிடைக்கும் வசூலானது, இந்தப் படத்தில் கிடைப்பது சந்தேகம். 

மாஸ்டருடன் ஈஸ்வரன் படமும் வெளியாகும்போது, இரு படங்களுக்கும் திரையரங்கு ஒதுக்கீடு எப்படி இருக்கும்?

மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும்போது , 90 முதல் 95 சதவீதம் வரையிலான திரையரங்குகளில் வெளியாகும். ஜனவரி 14 ஆம் தேதி மாஸ்டருடன்  ஈஸ்வரன் படம் வெளியாகும் பட்சத்தில் 70/30 கணக்கில் திரையரங்குகள் ஒதுக்கப்படும்.” என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com