ஷாருக்கானின் ‘பதான்’ படத்தால் ‘வாரிசு’, ‘துணிவு’ வசூல் பாதிக்குமா? - அதிரும் கட் அவுட்கள்

ஷாருக்கானின் ‘பதான்’ படத்தால் ‘வாரிசு’, ‘துணிவு’ வசூல் பாதிக்குமா? - அதிரும் கட் அவுட்கள்

ஷாருக்கானின் ‘பதான்’ படத்தால் ‘வாரிசு’, ‘துணிவு’ வசூல் பாதிக்குமா? - அதிரும் கட் அவுட்கள்

4 ஆண்டுகள் கழித்து ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியாக உள்ளநிலையில், தென்னிந்தியாவிலும் டிக்கெட் முன்பதிவில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதால், ‘வாரிசு’, ‘துணிவு’, ‘வால்டர் வீரய்யா’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ உள்ளிட்ட தென்னிந்தியப் படங்களின் வசூல் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இங்குக் காணலாம்.

ஷாருக்கான், அனுஷ்கா சர்மா, கத்ரீனா கைஃப் ஆகியோர் நடிப்பில், கடந்த 2018-ம் வெளியான திரைப்படம் ‘ஜீரோ’. இந்தப் படத்திற்குப் பிறகு ஷாருக்கான் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’, ‘லால் சிங் சத்தா’, பிரம்மாஸ்திரா’ உள்ளிட்டப் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் தான் வந்துள்ளாரே தவிர, தனி ஹீரோவாக அவர் படம் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஷாருக்கானின் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘பதான்’ படம் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் அதிகாலை 1 மணி, 4 மணி, 5 மணி ரசிகர்கள் ஷோவெல்லாம் உள்ள நிலையில், முதல்முறையாக ஷாருக்கானின் படம் காலை 6 மணிக்கு மும்பையில் வெளியாக உள்ளது. காவி சர்ச்சைகளுக்கு மத்தியில், சுமார் 4 ஆண்டுகள் கழித்து ஷாருக்கானின் படம் வெளியாக உள்ளதால், இந்தப் படத்தை கொண்டாடித் தீர்க்க அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். அதற்கேற்றவாறு டிக்கெட் முன்பதிவிலும் இந்தப் படம் பல சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக இந்தி, தெலுங்கிற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டிலும் இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சிறப்பாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே இந்தப் படம் இதுவரை 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவில் பொங்கலை முன்னிட்டு வெளியான ‘வாரிசு’, ‘துணிவு’, ‘வால்டர் வீரய்யா’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகியப் படங்கள் இதுவரை நல்ல வசூலைப் பெற்றுள்ள நிலையில், ‘பதான்’ படத்தால் வசூல் பாதிக்குமா என்றும் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் இதுவரை 265.7 கோடி ரூபாயும், அஜித்தின் ‘துணிவு’ படம் 189.79 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்துள்ளதுடன், 3-வது வாரத்தை இந்த இரு படங்களும் தொட்டுள்ளதால், வசூல் சற்று குறைந்தே காணப்படுகிறது. ‘வாரிசு’ படம் நேற்று முன்தினத்தை விட ஒருநாள் வசூல் பாதியாக, அதாவது ரூ. 5.2 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல், ‘துணிவு’ படமும் நேற்று முன்தினத்தை விட ஒருநாள் வசூல் பாதியாக, அதாவது ரூ. 2.28 கோடியாக குறைந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரேக்கை உடைக்கும் வகையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் ‘பதான்’ படம் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாகிறது. அதற்கேற்றவாறு, சத்யம், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் எல்லாம் மிகப்பெரிய கட் அவுட் ஷாருக்கானுக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் ஷாருக்கானுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஆடியன்ஸ் உள்ளனர்.

இதனால் ‘பதான்’ படத்திற்கு மல்டிபிளெக்ஸ் போன்ற திரையரங்குகளில் தனியாக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சிங்கிள் ஸ்கிரீன் மட்டுமே உள்ள திரையரங்குகளில் ‘வாரிசு’, ‘துணிவு’ படத்தையே இன்னும் சில நாட்கள் ஓட்டுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ‘பதான்’ படம் நன்றாக இருந்தால் இந்தப் படத்திற்கான ஸ்கிரீன்கள் அதிகளவில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு ஒதுக்கப்பட்டால் ஒருவேளை, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படத்தின் வசூல் பாதிக்கலாம் என்றே கூறப்படுகிறது. மேலும் ஷாருக்கானின் அடுத்தப் படமான ‘ஜவான்’ படத்தை தமிழ் இயக்குநர் அட்லீ இயக்க உள்ளதால் இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருக்க வாய்ப்பு உண்டு. இதே நிலைமை தான் தெலங்கானா மற்றும் ஆந்திராவிலும் நிலவுகிறது. தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் சாதிக்கும் நிலையில், பாலிவுட் படமான ‘பதான்’ தென்னிந்தியாவில் சாதிக்குமா இல்லையா என்பது நாளை கிடைக்கும் விமர்சனங்களை வைத்தே முடிவு செய்யப்படும். எனினும், ‘பதான்’ படம் முதல் வாரத்திலேயே 50 முதல் 60 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com