காட்சிகள் நீக்கப்பட்டது ஏன் ? - ‘சர்கார்’ படக்குழு விளக்கம்
‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டர் முன் இருந்த விஜய்யின் பேனர்களை கிழித்தனர். போராட்டம் காரணமாக பல திரையரங்குகளில் ‘சர்கார்’ காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சர்ச்சைக்குரியதாக கூறப்படும் காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புதல் அளித்தனர். சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்கான பணிகள் இன்று காலை நடைபெற்றது. நீக்கப்பட்ட காட்சிகளுடன் படத்தை பார்வையிட்டு தணிக்கை குழு ஒப்புதல் அளித்தது. பிற்பகல் முதல் ‘சர்கார்’ படம் மீண்டும் வழக்கம் போல் திரையரங்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, ‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டதால் இனி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவின் இயற்பெயரை படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்திற்கு வைத்ததுதான் பிரச்னைக்கு காரணம். அதேபோல், இலவச டிவி போன்ற பொருட்களை விட்டுவிட்டு மிக்சி, கிரைண்டரை மட்டும் எரிப்பதுபோல் காட்சி இருந்ததால் தான் பிரச்னை ஆகியுள்ளது” என்றார்.
இந்நிலையில், திரைப்படம் காண வரும் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் காட்சிகள் நீக்கப்பட்டன என்று ‘சர்கார்’ படக்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடைமைகளுக்கு சேதம் விளைவித்தனர்.
அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கும், திரைப்படம் காண வரும் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

