நடிகர் சங்கம் பெயரை மாற்றும் வரை நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்: பாரதிராஜா பரபர
தென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற பெயரை மாற்றும் வரை அந்தச் சங்கம் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ள மாட்டேன் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று திரை உலகினர் சார்பில் அமைதிப் போராட்டம் நடந்தப்பட்டது. அதில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சத்யராஜ், சிவகார்த்திகேயன், தனுஷ் என பலர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. மிகப் பெரிய அளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிம்பு பங்கேற்கவில்லை. வழக்கம் போல அஜித் இந்தப் போராட்டத்திற்கு வரவில்லை. வைரமுத்து, இளையராஜா கூட்டணியில் ஒருவரை மட்டும் காணோம். அவர் வேறு யாருமில்லை. தமிழ், தமிழர் என்ற எல்லா உணர்வு பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் பாரதிராஜாதான். அவரே வரவில்லை.
இந்நிலையில் இன்று சத்யராஜ், அமீர், வி.சேகர், பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவிடம் நேற்றைய கூட்டத்தில் கலந்துக் கொள்ளாதது சம்பந்தமாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,“மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு அனைத்திற்கும் சேர்த்து தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னையில் இருந்தது. ஆனால், இன்று எல்லா மாநிலங்களும் அவர்களுக்கு என தனித்தனியாக ஒரு அமைப்பை வைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரே உள்ளது. அது இன்னும் மாற்றப்படவில்லை. எனவே, அந்தப் பெயரை மாற்றும் வரை அந்த அமைப்பு சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்றார்.
இதற்கு முன்பாக ரஜினிகாந்த் இந்தச் சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு கமல்ஹாசன் மாற்றுக் கருத்தை முன் வைத்திருந்தார்.