தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான அணி வெற்றிப்பெற்றது. அவர்களது பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் மும்முனைப் போட்டி நடக்கிறது. விஷால் தலைமையிலான நம்ம அணியில் அவர், தலைவர் பதவிக்கும், 2 துணைத் தலைவர் பதவிக்கு பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், செயலாளர் பதவிகளுக்கு கே.ஈ.ஞானவேல் ராஜா, மிஷ்கின், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர்.பிரபு போட்டியிடுகின்றனர்.
எழுச்சிக் கூட்டணி சார்பில் கேயார் போட்டியிடுகிறார். இவர் அணியில் துணைத் தலைவர் பதவிகளுக்கு ஏ.எம்.ரத்னம், பி.டி.செல்வகுமார், செயலாளர் பதவிகளுக்கு ஏ.எல்.அழகப்பன், எஸ்.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னேற்ற அணி சார்பில் தற்போதைய பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவர் அணியில் துணைத் தலைவர் பதவிகளுக்கு கே.ராஜன், சுரேஷ் காமாட்சி ஆகியோரும், செயலாளர் பதவிகளுக்கு சிவசக்தி பாண்டியன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், பொருளாளர் பதவிக்கு விஜயமுரளி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர, 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 85 பேர் போட்டியிடுகின்றனர்.
சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடக்கும் இத்தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்துகிறார். காலை எட்டு மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி தயாரிப்பாளர்கள் வாக்களித்தனர். மாலை ஐந்து மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பின்னர் வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.மும்முனைப் போட்டி நடந்தாலும் விஷால் அணிக்கும் கேயார் அணிக்குமே பலத்த போட்டி நடப்பதாகக் கூறப்படுகிறது.