Poet
PoetPoovai Senguttuvan

எம் ஜி ஆர் வியந்து பார்த்த கவிஞர்... யார் இந்த பூவை செங்குட்டுவன்? | RIP Poovai Senguttuvan

குன்னக்குடி அவர்களின் நட்பையும் அன்பையும் மதித்து, குன்னக்குடி கேட்டதற்கிணங்க பக்திப் பாடலை எழுதினார் பூவையார், அந்தப் பாடல்கள்தான் 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' 
Published on
Summary

கவிஞர் எழுதிய பல நாடகங்களுக்கு, அண்ணா,  கருணாநிதி, எம்ஜிஆர், ஏ.பி.நாகராஜன், கொத்தமங்கலம் சுப்பு போன்றோர்கள் தலைமை வகித்து கவிஞரை சிறப்பித்துப் பாராட்டியுள்ளனர்.

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் செப்டம்பர் 5ம் தேதி, வயது மூப்பு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் எழுதிய இவர் பற்றி இன்று பலருக்கும் பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் திரையிசை பாடல்களில் சாதனைகள் செய்தவர், பக்தி பாடல்கள் எழுதி அருட்கவிஞர் அழைக்கப்பட்டவர், எம்.ஜி.ஆர் முதல் அப்துல் கலாம் வரை பலரது கவனத்தை ஈர்த்தவர். யார் இந்த பூவை செங்குட்டுவன்?


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீழப்பூங்குடி என்னும் கிராமத்தில், இராமையா அம்பலம் - இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாய் பிறந்தவர் முருகவேல் காந்தி. கருணாநிதியின் "சேரன் செங்குட்டுவன்" நாடகத்தைப் பார்த்த பின்னர், தன் இயர் பெயரான 'முருகவேல் காந்தி'யை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். ஊர் பெயரையும் முன்னால் இணைத்து பூவை செங்குட்டுவன் என்ற பெயர் கொண்டார். கவிஞருக்கு இளம் வயது முதலே 'குன்னக்குடி' வைத்தியநாதன் நெருங்கிய நண்பர். சென்னையில் சந்தித்த கவிஞர் செங்குட்டுவனை, கதை வசனம் எழுத வைத்து, பல நாடகங்களை தயாரித்து இசையமைத்து இயக்கினார் குன்னக்குடி அவர்கள். 

Poovai Sengutuvan
Poovai SengutuvanKunnakudi Vaidyanathan

மேலும் கவிஞர் எழுதிய பல நாடகங்களுக்கு, அண்ணா,  கருணாநிதி, எம்ஜிஆர், ஏ.பி.நாகராஜன், கொத்தமங்கலம் சுப்பு போன்றோர்கள் தலைமை வகித்து கவிஞரை சிறப்பித்துப் பாராட்டியுள்ளனர். கலை உலகில் இருப்பவர்களுக்கே உரிய சில சறுக்கல்களை கவிஞர் சந்தித்த போது, மனம் வருந்தி, தான் எழுதிய கதைகள், நாடகங்கள், பாடல்களை தீயிட்டு கொளுத்திட முயன்றார். அன்றைய பொழுது. வாசலில் ஒருவர் வந்து "இங்கே செங்குட்டுவன் என்பவர் யார்? உங்களை கல்யாணமய்யர் உடனே அழைத்து வரச் சொன்னார்கள்" என்று சொன்னபோது கவிஞரின் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. கல்யாணமய்யரை கவிஞர் சந்தித்தார். "கவிஞரே! நீங்கள் எழுதித் தந்த எட்டு நாடகங்களையும் ரிக்கார்டிங் செய்து விட்டோம்" என்று கூறி அதற்கான பணத்தைக் கொடுத்தார். இந்நிகழ்வு கவிஞரின் வாழ்வில் ஒளி ஏற்றிய நல்லதொரு திருப்பமாகும். 

இளம் வயதிலேயே பகுத்தறிவுக் கொள்கைகளையுடைய கவிஞரிடம் குன்னக்குடி அவர்கள்,  பக்திப் பாடல்களை எழுதித் தருமாறு கேட்ட பொழுது. கவிஞரின் மனதில் பக்தியிருந்தாலும் அதை வெளிக் காட்டாமல் மறுத்துள்ளார். பின்னர் குன்னக்குடி அவர்களின் நட்பையும் அன்பையும் மதித்து, குன்னக்குடி கேட்டதற்கிணங்க பக்திப் பாடலை கவிஞர் எழுதினார். அந்தப் பாடல்கள்தான் 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' மற்றும் 'ஆடுகின்றானடி தில்லையிலே'. கொலம்பியா இசைத்தட்டிற்காக குன்னக்குடி இசையில் சூலமங்கலம் சாகோதரிகள் பாட , வெளியான இந்த இரண்டு பாடல்களும் அமோக விற்பனையையும் வரவேற்பையும் பெற்றது. 

ஃபிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்ற ஒரு விழாவில் 'திருப்பரங்குன்றத்தில்' பாடலை இறைவணக்கப் பாடலாக சூலமங்கலம் சகோதரிகள் பாட, விழாவிற்கு வருகை தந்திருந்த ஏ.பி.நாகராஜன், ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ‌ஆகியோர் இப்பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்திருக்கிறார்கள். கவியரசருக்கு ஒரு யோசனை தோன்றியது, இந்தப் பாடலை அப்படியே `கந்தன் கருணை'யில் வைக்காலாமே என்று. தனது யோசனையை ஏ.பி.என். அவர்களிடம் கூற, அவரும் சம்மதித்தார். ஒருவகையில் கவியரசரால் சிபாரிசு செய்யப்பட்ட ஒரு கவிஞராக, திரையுலகில் அறிமுகம் ஆனார் பூவையார். 

இதன் பின்னர் கவிஞருக்கு  இயக்குநர்  வி.செ.குகநாதன்  அறிமுகமாகி நல்ல நட்போடு பழகி வந்தனர். 'புதிய பூமி' எனும் எம்ஜிஆர் படத்திற்கு வி.செ.குகநாதன் கதை வசனம். படப்பிடிப்பு தளத்தில்  பூவையார் எழுதிய பாடல் ஒன்றை முனு முனுத்துக்‌ கொண்டிருந்தாராம் வி.செ.குகநாதன். மக்கள் திலகம் அவர்கள் குகநாதன் அவர்களைக் கூப்பிட்டு, "என்ன முனுமுனுத்துக்  கொண்டிருக்கிறாய்" என்று கேட்க, 'நான் உங்கள் வீட்டுப்பிள்ளை இது ஊரறிந்த உண்மை' என்று பாடல் வரியை பாடினாரம் குகநாதன். 

MRG
MRGPuthiya Bhoomi

மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போய் "யார் எழுதியது" என்று கேட்க பூவை செங்குட்டுவன் என்ற ஒரு கவிஞர் எனக் கூறியிருக்கிறார். உடனடியாக அந்தப் பாடலை மெல்லிசை மன்னரின் இசையில் ஒலிப்பதிவு செய்திட உத்தரவிட்டார் எம்ஜிஆர். கவிஞரின் பாடல் வரிகளில் எந்த மாற்றமும் செய்யாமல் எம்.எஸ்.வி.அவர்கள் அப்படியே ஒலிப்பதிவு செய்ய‌. அந்தப் பாடல் மிகவும் பிரபலமானது. வி.செ.குகநாதன் அவர்களால் கவிஞருக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. கவிஞரின் திரை உலகப் பயணத்தில் இந்தப் பாடலும் மக்கள் மனதிலும், மக்கள் திலகம் மனதிலும், ஆழமாய் வேரூன்றி விருட்சமாய் வளர்ந்தது. மக்கள் திலகத்தின் கொள்கை பாடல்களில் இதுவும் ஒன்று என்றாலும்... மற்றைய பாடல்களை விட கொள்கை பிரச்சாரம் பாடலாக இப்பாடலே முன்னிலை பெற்றது. 


இது மட்டுமின்றி, 'கெளரி கல்யாணம்' படத்தில் `திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்', 'கற்பூரம்' படத்தில் `வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல் போல் இருக்குதடி',  'வா ராஜா வா' படத்தில் `இறைவன் படைத்த உலகையெல்லாம்', 'திருமலை தென்குமரி' படத்தில் `குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா', 'அகத்தியர் ' படத்தில் `தாயின் சிறந்த கோயிலுமில்லை' எனப் பல பாடல்களை எழுதியுள்ளார். 'நாலும் தெரிந்தவன்' படத்தில் இவர் எழுதிய `நிலவுக்கே போகலாம் தேன் நிலவுக்கே' என்ற பாடல், ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த போது, இலங்கை வானொலியில் அன்றைய தினம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டது.

வள்ளுவனின் திருக்குறளில்133 அதிகாரத்தையும் எளிய நடையில் இசைப்பாடலாக (133 பாடல்கள்) தந்தவர் இவர் ஒருவரே. மேனாள் குடியரசர் அப்துல்கலாம் அவர்கள் இதனை மனமுவந்து பாராட்டி மடல் அனுப்பினார். அந்த இசைப் பாடல் 'குறள் தரும் பொருள்' என்ற இசைப் பேழையாக இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்டு பெருமை சேர்த்தார். பத்திரிகை பலவும் பாராட்டின.

தமிழகத்தின் ஐந்து முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 'அறிஞர் அண்ணா ஆட்சிதானிது' என்று இவர் எழுதிய தனியிசை பாடல் பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவும், கூட்டம் நிறைவுபெறும் போதும் ஒலிபரப்பப்பட்டது. கருணாநிதிக்காக 'கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும்' என்ற பாடலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக 'நான் உங்கள் வீட்டுப்பிள்ளை' என்ற பாடலும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் முதன் முதலாக பாடிய இரண்டு அம்மன் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் பூவையார். மேலும், இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பல நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் பூவை செங்குட்டுவன்.

இவரின் படைப்பாற்றலை பாராட்டி கலைமாமணி (1980),  கலைத்துறை வித்தகர் விருதான கண்ணதாசன் விருது (1997), மகாகவி பாராதியார் விருது (2020) ஆகியவற்றை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷ படைப்புகளை தந்த பூவை செங்குட்டுவன் அவரின் படைப்புகளுக்காக என்றும் நினைவுகூரப்படுவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com