யார் இந்த சின்மயி ?

யார் இந்த சின்மயி ?

யார் இந்த சின்மயி ?
Published on

'ஒரு தெய்வம் தந்த பூவே' என கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் இருந்துதான் சின்மயி பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார். சின்மயி குரல் இந்தியத் திரை உலகத்துக்கு முதல் முதலில் தெரிய ஆரம்பித்தது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்துக்காகத்தான். இந்தப் படத்திற்கு பாடல் எழுதியதற்காக கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் கிடைத்தது. சின்மயியை பாடவைத்தவர் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். இந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். ஆக, சின்மயிக்கு "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தை அவ்வளவு எளிதாக கடந்துச் சென்றுவிட முடியாது.

சின்மயி என்று ஒரு பாடகி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பரவலாக பேசப்பட்டார். அதன் பின்பு ஏராளமான தமிழ் பாடல்களை பாடினார். ஏ.ஆர.ரகுமானின் இசையில் தொடர்ச்சியான பாடல்களை பாடினாலும், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் சின்மயி குரல் ஒளித்தது. இதன் பின்பு மற்ற மொழி படங்களிலும் குறிப்பாக இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் பின்னணி பாடினார் சின்மயி. 10 வயது வரை மும்பையில் வசித்தாலும், அதன் பின்பு தன் பள்ளி படிப்பை சென்னையில் தொடங்கினார். சென்னையில்தான் அவர் கர்நாடக இசையையும், கஜல் மற்றும் ஹிந்துஸ்தானி இசையை முறையாக கற்க தொடங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. சைக்காலஜி பட்டப் படிப்பையும் முடித்த சின்மயி, சினிமாவில் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். சின்மயி பாட்டுபாடுவதோடு மட்டுமல்லாமல், 2006 இல் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுக்கவும் தொடங்கினார். 2006 இல் வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் நடித்த பூமிகாவுக்கு முதல் முறையாக டப்பிங் கொடுத்தார் சின்மயி. இதனைத் தொடர்ந்து சமந்தா, எமி ஜாக்சன், தமன்னா, த்ரிஷா ஆகியோருக்கு தொடர்ந்து டப்பிங் செய்தார். அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 96 படத்தில், த்ரிஷாவுக்கு குரல் கொடுத்தவர் சின்மயிதான். 2013 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை காதல் திருமணம் செய்துக் கொண்டார் சின்மயி.

சர்ச்சை ஆரம்பம்

சின்மயி சமூக வலைத்தளங்களில் மிகத் தீவிரமாக செயல்படக் கூடியவர். தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். முதல் முதலில்  2011 இல், இவ்வாறான ஒரு ட்வீட்டை பதிவிட்டு இருந்தார் அதில் "'மீனவர்கள் மீன்களைக் கொல்லலாம். கப்பல் படை மீனவர்களைக் கொன்றால் தப்பா ?" என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சின்மயியை பல்வேறு தரப்பினர் கடுமையான வார்த்தைகளில் தாக்கினர்.

இதனையடுத்து இட ஒதுக்கீடு தொடர்பாக கருத்தை வெளியிட்டார் அதில் "தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காண்பித்து, சலுகைகள் பெற்றுத் தருகின்றனர்" என ட்வீட் போட்டிருந்தார். இதற்கும் கடுமையான எதிர்வினைகள். இதன் தொடர்ச்சியாக சின்மயி தன்னை ட்விட்டரில் ஆபாசமாக விமர்சித்தவர்கள் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து அந்தப் புகாரின் மீது சிலர் கைதும் செய்யப்பட்டனர். அப்போது இந்த விவகாரம் மிகவும் பூதாகரமாக பேசப்பட்டது. அதன் பின்பு பெரியளவில் சர்ச்சைகளில் சிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது சர்ச்சைக்குறிய கருத்துகள் வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தார் சின்மயி. இப்போது இதன் நீட்சியாக உச்சக்கட்டமாக கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com