மொட்டைத் தலையுடன் சிவராஜ்குமார்... விரைவில் அறுவை சிகிச்சை, சிவாண்ணா சொன்னது என்ன?
கன்னட சினிமாவின் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார். தமிழில் `ஜெயிலர்', `கேப்டன் மில்லர்' படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இங்கும் மிகப் பிரபலமானார். சமீப காலமாக அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளியான அவரது `பைராதி ரனகல்' படத்தின் புரமோஷன் பேட்டிகளின் போது "தனக்கு உடல்நிலை சரி இல்லை எனவும், அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை எடுக்கப் போகிறேன்" எனவும் தெரிவித்திருந்தார். உடல் நலத்தில் என்ன பிரச்சனை என்பதை இப்போது வெளியே சொல்ல விரும்பவில்லை எனவும் அந்தப் பேட்டிகளின் போது தெரிவித்திருந்தார்.
நேற்று உபேந்திரா இயக்கி நடித்து வெளியாகவுள்ள `UI' கன்னடப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ்குமார் `ஓம்' என்ற படத்தில் நடித்துள்ளார். எனவே அந்த நட்பின் அடிப்படையில், இந்த நிகழ்வில் உடல்நிலை சரி இல்லாத போதிலும் கலந்து கொண்டார். தலை மொட்டை அடித்து தொப்பி அணிந்த படி இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர், பட வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் "இந்தப் படத்தை 20ம் தேதி நான் அமெரிக்காவில் பார்த்து விடுகிறேன். எனக்கு 24ம் தேதி அறுவை சிகிச்சை இருக்கிறது" என்று தெரிவித்தார்.
உடல்நிலை சரி இல்லை என்பதெல்லாம் தாண்டி நட்புக்கு மரியாதை அளித்து, சக கலைஞனை வாழ்த்த வந்த, சிவராஜ்குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் நல்ல உடல் நலத்துடன் திரும்பி வர வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.