அடுத்தது STR 49; அன்புவின் எழுச்சி எப்போது? வெற்றிமாறனின் பதில் என்ன? | Vetrimaaran
.`குபேரா' இசை வெளியீட்டு விழாவில் தனுஷும் வடசென்னை பற்றி கேட்கப்பட்ட போது "2018ல் இருந்து கேட்டு வருகிறீர்கள், அடுத்த வருடம் நடக்கும்" என்றார்.
வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என புரமோ வெளியிட்டு அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். விடுதலை 2 படத்திற்கு பிறகு சூர்யாவின் `வாடிவாசல்' படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் 30ம் தேதி தன்னுடைய அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார் எனவும், இப்படத்தை தாணு தயாரிக்கிறார் எனவும் வீடியோ வெளியிட்டு அறிவித்தார் வெற்றிமாறன். மேலும் இப்படம் வடசென்னை 2ம் பாகம் இல்லை, ஆனால் வடசென்னை உலகில் நடக்கும் ஒரு கதை எனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து படத்தின் புரமோ படப்பிடிப்புகள் நடைபெற்றது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் துவங்காமலே இருந்தது. இந்த நிலையில் வெற்றிமாறனின் 50வது பிறந்தநாளான இன்று தயாரிப்பாளர் தாணு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதில் சிம்புவின் 49வது படத்தின் புரமோ டீசர் வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் முழு புரமோ விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது.
சமீபத்தில் வெற்றிமாறன் தயாரித்த `பேட் கேர்ள்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் மிஷ்கின், `வாடிவாசல்' படத்தை சூர்யாவுடன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்க வேண்டும் என வேண்டுகோள் ஒன்றை வைத்தார். இதற்கு வெற்றிமாறன் பேசும்போது பதிலளித்தார். அதில் "வாடிவாசல் அறிவிப்பு இன்னும் 10 நாட்கள் கழித்து வெளியாகும்" எனக் கூறினார்.
`வாடிவாசல்', `சிம்பு 49' ஒரு பக்கம் இருக்க, வடசென்னை 2 எப்போது எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு முன்பு சில மேடைகளில் அடுத்த வருடம் வடசென்னை வரும் எனக் கூறி வந்தார்.`குபேரா' இசை வெளியீட்டு விழாவில் தனுஷும் வடசென்னை பற்றி கேட்கப்பட்ட போது "2018ல் இருந்து கேட்டு வருகிறீர்கள், அடுத்த வருடம் நடக்கும்" என்றார். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் வடசென்னை 2 பற்றி கேட்கப்பட்ட போது, "எனக்கு இப்போது ஒரு மீம் தான் நினைவுக்கு வருகிறது. அதில் என்னுடைய புகைப்படத்தை போட்டு 'நான் வெற்றிமாறன், வடசென்னை 2வால் பாதிக்கப்பட்டவன்' எனப் போட்டிருந்தார்கள். எனவே இதுதான் அக்கேள்விக்கு என் பதில்" என்றார். இதை எல்லாம் வைத்து பார்க்கையில் இப்போது வெற்றியின் உடனடி படமாக `சிம்பு 49', அடுத்த படமாக சூர்யாவின் `வாடிவாசல்' இருக்கும் என புரிகிறது. எனவே `வடசென்னை 2' இன்னும் தள்ளிப் போகும் சூழல் ஏற்படும். அன்புவின் எழுச்சியை பார்க்க நாம் இன்னும் காத்திருக்க வேண்டும் போல.