சிம்பு நடித்த ‘வேட்டை மன்னன்’ நின்றுபோனது ஏன்? காரணம் சொன்ன தயாரிப்பாளர் மகன்!
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் படம் செய்த இவரது முதல் படம் துவங்கி சில தினங்களில் நின்றுவிட்டது என உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்கிய `வேட்டை மன்னன்' படம்தான் அது. இந்தப் படத்தில் சிம்புவுடன் ஜெய், ஹன்சிகா மோத்வானி, தீக்ஷா சேத் எனப் பலரும் நடிக்க ஒப்பந்தமானார். இன்று நடிகராக ஜெயித்த சிவகார்த்திகேயன் மற்றும் கவின் ஆகியோர் `வேட்டை மன்னன்' படத்தில் உதவி இயக்குநர்கள். இப்படத்தின் அறிவிப்புக்கு ஓர் அறிமுக டீசரையும் 2011ல் வெளியிட்டனர்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் துவங்கிய இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையிலும், அந்தப் படம் கைவிடப்பட்டது. அது எதனால் கைவிடப்பட்டது என்ற கேள்விக்கு தெளிவான பதில் எதுவும் இல்லாத நிலையில், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மகனும், `ரேணிகுண்டா' பட ஹீரோவுமான ஜானி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அந்த பதிலை அளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் "வேட்டை மன்னன் படத்தை நாங்கள் தயாரித்த சமயத்தில் அதுதான் சிம்புவின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம். அப்பா எப்போதும் ரிஸ்க் எடுப்பது பற்றி கவலைப்படமாட்டார். அவர் தன்னுடைய இலக்கை அடைவதை நோக்கி பயணிப்பார். ஆனால் அந்த சமயத்தில் தயாரித்த சில படங்கள் வர்த்தக ரீதியில் சரியாக வசூல் செய்யவில்லை. எனவே `வேட்டை மன்னன்' படத்துக்கான முதலீடுகள் எதுவும் கிடைக்காமல் போனது.
அதைச் சரி செய்ய குறுகிய கால தயாரிப்பாக `வாலு' படத்தைத் தயாரித்து, அதில் இருந்து வரும் பணத்தில் `வேட்டை மன்னன்' படத்தை மீண்டும் துவங்க நினைத்தார். ஆனால் `போடா போடி' படம் எதிர்பார்த்த அளவு ஹிட் ஆகவில்லை என்பதால், ’வாலு’ படத்தை முடிப்பதே சவாலாக மாறியது. ஆனாலும்கூட எப்படியாவது `வேட்டை மன்னன்' படத்தை எடுக்க வேண்டும் என அப்பா முயற்சித்தார், ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளால் அதைச் செய்ய முடியவில்லை." எனக் கூறியுள்ளார் ஜானி.

