‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி?

‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி?
‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி?

வசூல் கணக்குகளை எல்லாம் தாண்டி ‘பேட்ட’,‘விஸ்வாசம்’ படங்கள் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துவிட்டது. 

11 நாட்களை கடந்து ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ படங்களின் வசூல் குறித்த வெவ்வேறான தகவல்கள் இன்றும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், உறுதியாக இதுதான் வசூல் என்று எதுவும் இல்லை. அறிவிப்பு வெளியான நாள் முதலே.....                 பொதுவாக பண்டிகை நாட்களின் உச்சநட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதில்லை. ஒரு காலத்தில் அதுபோன்று வந்திருந்தாலும், பின்னர் திட்டமிட்டே அது தவிர்க்கப்பட்டது. 2014ம் ஆண்டு பொங்கலில் அஜித்தின் ‘வீரம்’, விஜயின் ‘ஜில்லா’ படங்கள் ஒன்றாக ரிலீசானது. அதன் பிறகு பெரிதாக நேருக்குநேர் உச்சநட்சத்திரங்களின் படங்கள் வெளியாவதில்லை.

பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால், ரஜினி, அஜித் என்ற இரண்டு தமிழ் உச்ச நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் என்னவாகும் என்ற பேச்சுகள் அப்பொழுது முதலே தொடங்கியது.

எம்.ஜி.ஆர் -சிவாஜி., ரஜினி-கமல் என்ற வரிசையில் தற்போது விஜய்-அஜித் உள்ளனர். இருப்பினும், விஜய் அஜித் உடன் இன்றளவும் ரஜினிகாந்த் போட்டி போட்டு வருகிறார். அதனால், ‘பேட்ட’,‘விஸ்வாசம்’ படங்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று பேசப்பட்டது. இந்தப் போட்டியிலிருந்து சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியேறியது.

இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகும் வரை ‘பேட்ட’,‘விஸ்வாசம்’ ரசிகர்கள் இடையேயான கருத்து மோதல் சமூக வலைதளங்களில் கடுமையாக இருந்தது. அவர்களது ரசிகர்கள் ஆக்ரோசமாக பதிவுகளை போட்டு வந்தார்கள். போஸ்டர், டீசர் என அடுத்தடுத்த ரிலீஸ் வெளியிட்டு ரசிகர்களை இருபடங்களும் குஷிப்படுத்தியது. அதனால், இரண்டு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் எகிறியது. 

ரிலீஸ் ஆனது படங்கள்

இந்நிலையில்தான், ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் கடந்த 10ஆம் தேதி ஒன்றாக வெளியானது. 9ம் தேதி இரவு முதலே ரஜினி மற்றும் அஜித்தின் ரசிகர்கள் கட் அவுட், பேனர்கள் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 10ம் தேதி நள்ளிரவு ஒருமணி முதலே சிறப்பு காட்சிகள் போடப்பட்டன. சிறப்புக் காட்சிகளுக்காக ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். மேல தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் படத்தினை ரசிகர்கள் வரவேற்றனர். சில இடங்களில் டிக்கெட் விலை அதிகம் என்ற செய்தி வெளியான போதும், எங்கும் கூட்டத்திற்கு குறைவில்லை. அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இரண்டு படங்களும் ஓடியது.

விமர்சனங்களை தாண்டி

முதல்நாள் வரவேற்பை தாண்டி, இரண்டு படங்களை பற்றிய விமர்சனங்கள் வெளியாக தொடங்கியது. இரண்டு படங்களுக்கும் ஓரளவு நல்ல விமர்சனங்கள் வந்தன. ரசிகர்களுக்கான படமாகவே இரண்டும் இருந்ததாக பெரும்பாலான விமர்சனங்கள் தெரிவித்தன. பொங்கல் விடுமுறை தினங்கள் என்பதால் எப்படியும் படம் ஓடி விடும். இருப்பினும், ஓரளவு நல்ல விமர்சனங்கள் வந்ததால் தான் அரங்கு நிறைந்த காட்சிகளாக இரண்டு படங்களும் ஓடின. குறிப்பாக பொங்கல் பண்டிகை நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் கூட்டம் அலை மோதியது.

தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் திரையங்களில் ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. முதல் நாள் வசூல் தொடங்கி, நேற்றைய தினம் வரை வசூல் ரீதியான கணக்குகள் தொடர்ச்சியாக வெளியானது. சென்னை மற்றும் உலக அரங்கில் ‘பேட்ட’ படமும், தமிழக அளவில் ‘விஸ்வாசம்’ படமும் வசூலில் முன்னிலை வகிப்பதாக பேசப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருவார வசூலாக ‘விஸ்வாசம்’ 85 கோடியும் ‘பேட்ட’ 58 கோடியும் ஈட்டியுள்ளதாக மேலோட்டமான தகவல் வெளியானது. 

ஆனால் உலக அளவில் ‘பேட்ட’ வசூல் முன்னுக்கு நிற்பதாக கூறப்பட்டு வருகிறது. சென்னையில் பேட்டை படம் 11 நாட்களில் 11.94 கோடி ரூபாயும், விஸ்வாசம் 9.56 கோடியும் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை பேட்ட 17 கோடி ரூபாயும், விஸ்வாசம் 1.81 கோடியும் வசூல் செய்துள்ளது.

‘பேட்ட’ படம் பார்த்தவர்கள் பெரும்பாலும், “ரஜினியை பழைய ரஜினியாக பார்க்க முடிகிறது. பாடல்கள் நன்றாக இருக்கிறது” என்றனர். ஆனால் ‘விஸ்வாசம்’ படத்திற்கு வந்த ஒருமித்த விமர்சனமாக, “குடும்பத் திரைப்படம். ரொம்ப செண்டிமெண்டா இருக்கு” என்பதுதான். இதனால் பொங்கல் நேரத்தின் போது, குடும்பங்களின் படையெடுப்பு விஸ்வாசத்திற்கு அதிகரித்தது. இதனால் அதன் வசூல் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. 

ரசிகர்களுக்கு விருந்துதான்

வசூலை தாண்டி இரண்டு படங்களுக்கும் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினி மற்றும் அஜித்தின் ரசிகர்களுக்கு இது பொங்கல் விருந்தாகவே அமைந்துவிட்டது. இருவரின் ரசிகர்களும் கொண்டாடுவதற்கு ஏற்ற விஷயங்களை இரண்டு படங்களுமே நிறைவாகவே கொடுத்துள்ளது. மற்றபடி கதை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் இல்லை. இது ரசிகர்களுக்காக பொங்கல்தான். ரஜினி, அஜித் இருவரும் தங்களது ‘மாஸ்’-ஐ நிரூபித்து இருக்கிறார்கள். இதற்கு சமீப காலங்களில் இப்படியொடி போட்டியை தமிழ் திரையுலகம் கண்டதில்லை என்றே பலரும் கூறுகிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com