மாறிமாறி புகாரளிக்கும் கவிஞர் சினேகன்- நடிகை ஜெயலட்சுமி: என்னதான் பிரச்னை?

மாறிமாறி புகாரளிக்கும் கவிஞர் சினேகன்- நடிகை ஜெயலட்சுமி: என்னதான் பிரச்னை?
மாறிமாறி புகாரளிக்கும் கவிஞர் சினேகன்- நடிகை ஜெயலட்சுமி: என்னதான் பிரச்னை?

ஒரே பெயரில் தொடங்கப்பட்ட இரண்டு அறக்கட்டளைகள்... ஒருவர் பண வசூல் செய்ததில் மற்றொருவரிடம் கணக்குக்கேட்ட வருமான வரித்துறை... மாறி மாறி புகார் அளித்துள்ள திரைப்பிரபலங்கள்... என்ன பிரச்னை கவிஞர் சினேகனுக்கும், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமிக்கும்? இருவர் புகாரிலும் என்ன கூறியுள்ளனர்? - முழு விவரம்...

திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கடந்த 5-ஆம் தேதி தனது சினேகம் தொண்டு நிறுவனப் பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி மீது சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், தான் 2015 முதல் சினேகம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்திவருவதாகவும், அதன்மூலம் பலருக்கும் பல உதவிகள் செய்துவருவதாகவும், தற்போது தனது அறக்கட்டளை பெயரில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி அதன்மூலம் பணம் வசூலித்து வருவதாகவும், இதனால் தனது அறக்கட்டளைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

புகாரளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், ‘’கடந்த 2015 முதல் நான் சினேகன் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்திவருகிறேன். அதன்மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்துவருகிறேன். எனது ஃபவுண்டேஷன் பெயரிலேயே வங்கிக்கணக்குகளை வைத்து, சமூக வலைதளங்களில் பணம் வசூல் செய்வதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து வருமான வரித்துறையினர் என்னிடம் நிதி வசூலிக்கிறீர்களா? என கேட்டபோதுதான் எனக்கு தெரிந்தது. நான் இதுவரை அப்படி நிதி எதுவும் வசூலிக்கவில்லை. எனது சொந்த பணத்தில்தான் செய்துவருகிறேன் என்று கூறினேன். இதுகுறித்து எனது வழக்கறிஞரை வைத்து ஜெயலட்சுமிக்கு இரண்டுமுறை நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் தவறான முகவரி என்று திரும்ப வந்துவிட்டது.

சமூக வலைதளங்களில் தேடி பார்த்தபோது சின்னத்திரை நடிகை மற்றும் வழக்கறிஞர் ஜெயலட்சுமி என்பவருடைய பெயரில் அந்த சமூக வலைதள கணக்குகள் இயங்கிவருகின்றன. அவருடைய மகள் பேசுவதுபோன்ற வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் உள்ளது. அவர்மீது ஏற்கெனவே புகார்கள் இருப்பதால் அவரை நேரடியாக தொடர்புகொள்ள வேண்டாம் என காவல்துறையை நாடி வந்துள்ளேன். இதில் அரசியலை புகுத்த நான் ஆசைப்படவில்லை’’ என்று கூறினார்.

இந்நிலையில் சினேகன் தன்னை தவறாக சித்தரிக்கும் வகையில் பேசியுள்ளார் எனவும், பொதுவெளியில் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பேசி உள்ளதாகவும் ஜெயலட்சுமி குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி கூறியதாவது, ‘’ அவர் என்மீது தவறான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அவர் எதையும் தெரிந்து பேச வேண்டும். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சினேகன் பேசி உள்ளார். இது தொடர்பாக தேசியம் மற்றும் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளேன். அவரை நான் சும்மா விட மாட்டேன்.

சினேகன் பப்ளிசிட்டி தேடுவதற்காக என்னை அவமானப்படுத்தி பேசியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டப்படி சினேகம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி மக்களுக்கு பல நற்செயல்களை செய்து வருகிறேன். எந்த இடத்திலும் சிநேகன் பெயரை பயன்படுத்தி நாங்கள் டொனேஷன் வாங்கவில்லை. எனக்கு சொந்தமான சினேகம் அறக்கட்டளையை 2018ல் பதிவு செய்தேன். இதில் மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளோம் குறிப்பாக புயல் பேரிடர் காலத்தில் பல உதவிகளை செய்துள்ளோம். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.

2015ல் பதிவு செய்ததாக சினேகன் கூறுகிறார் என்னென்ன சேவைகளை இந்த அறக்கட்டளையின் மூலம் செய்துள்ளார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். ஆனால் என்னுடைய அறக்கட்டளை சார்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளையிட்டு வருகிறேன். அவர் அரசியல் நோக்கத்திற்காகவும் விளம்பரத்திற்கும் இப்படி செய்கிறார். ஒரு பெண் அரசியலில் இருக்கிறார் என்பதற்காகவே இப்படி செய்கிறார்கள்.

அவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர். அவர் வேண்டுமென்றே இது போன்று புகார் கொடுத்துள்ளார். அவர்கள் நண்பர்களிடம் இருந்து நான் பணம் பெற்றுள்ளதாக கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும். அவர் எனக்கு அனுப்பிய நோட்டீஸ் ரிட்டனாகியது என்று சொல்லி இருக்கிறார். அந்த அட்ரஸ் என்னவென்று சொல்ல வேண்டும். எந்த வகையில் அவருடைய பெயரை நான் தவறாக பயன்படுத்தினேன் என்று சினேகன் சொல்ல வேண்டும். அவர் என் மீது ஆதாரம் இல்லாமல் புகார் கொடுத்துள்ளார்.

சினேகம் அறக்கட்டளை என்ற பெயரை இணையதளத்தில் தேடினால் பல்வேறு அறக்கட்டளைகள் வருகின்றது. ஆனால் ஏன் என் மீது மட்டும் புகார் அளித்துள்ளார்? இந்த புகார் பற்றி என்னிடம் பேசியபோது தனிமையில் காபி குடிக்க நான் அழைத்தேன் எனக் கூறுகிறார். எந்த நோக்கத்தில் இப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை. இது கமல்ஹாசனின் அறிவுரையோடு நடக்கிறதா? என்றும் அவர் தெரிவிக்க வேண்டும். யார் மீதாவது புகார் அளிக்க வேண்டும் என்றால் கட்சியில் இருப்பவர்கள் அந்த தலைவர்களிடம் அது பற்றி கூற வேண்டும். நான் புகார் அளிக்க வேண்டும் என்றால் அண்ணாமலையிடம் இது குறித்து பேசி முடிவு எடுத்திருப்பேன்.

கலைத்துறையில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. தற்போதைய பிரச்னை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கூறிவிட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பது கட்சிக்கு நன்றாக தெரியும். அறக்கட்டளையின் பெயரை ரெஜிஸ்டர் செய்யும்பொழுது தவறு ஏற்பட்டு இருந்தால் கண்டிப்பாக நான் விட்டு தருவேன்.

சினேகம் அறக்கட்டளை என்னுடையது. நான்தான் நடத்துகிறேன் நான்தான் நிறுவனர். என் மீது மோசடி செய்ததாக நிரூபணம் செய்யப்பட்டால் அரசியல் வாழ்க்கையே வேண்டாம் என்று விலகி விடுவிடுகிறேன். மக்கள் சேவை செய்வதற்கு நான் தகுதியானவள் இல்லை என முடிவு செய்து விலகி விடுவேன்.



சினேகன் என்மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாட்களுக்குள் ஆதாரத்தோடு விளக்கமளிக்க லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இல்லாவிட்டால் என்மீது அவதூறாக குற்றம்சாட்டிய கவிஞர் சினேகன், பொதுவெளியில் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்மீது மான நஷட வழக்கு தொடர்வேன்’’ என்று கூறியுள்ளார்.

சின்னத்திரை பிரபலமான நடிகை ஜெயலட்சுமி சில சினிமாக்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் இவர் பாஜகவில் மாநில மகளிர் துணைத்தலைவியாக உள்ளார். இவர்மீது ஏற்கெனவே மகளிர் சுய உதவிக்குழு அளித்த மோசடி புகார் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சினேகனும் ஜெயலட்சுமியும் ஒருவர்மீது ஒருவர் மாறிமாறி புகார் அளித்துள்ளனர்.

பொதுவாக ஒரே பெயரில் ஆங்காங்கே அறக்கட்டளைகள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூலித்தால் அதற்கு வருமான வரித்துறையினரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வருமான வரித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஒரே பெயரிலுள்ள இரண்டு அறக்கட்டளைகளிடையே குழப்பம் எழுந்துள்ளதால் இந்த புகார் கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com