நிவாரணப் பணிகளுக்காக திருமணத்தை தள்ளி வைத்த நடிகர்!
கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை.
தமிழில் விஜய்யின் ’தலைவா’, விஷாலின் ’ஆம்பள’ , 7 நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை. இந்தியில் சில படங்களிலும் நடித்துள்ளார். கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள நன்னூரைச் சேர்ந்த இவர், தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருக்கும் அஜிதா பாலகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் மழை, வெள்ளம் கேரளாவை மொத்தமாக புரட்டிப் போட்டு விட்டதால் திருமணத்தை தள்ளி வைத்துள்ள ராஜீவ், நண்பர்களுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் களமிறங்கிவிட்டார்.
இதுபற்றி ராஜீவ் பிள்ளை கூறும்போது, ’எங்கள் கிராமம் மொத்தமும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மீட்புப் படகுகளுக்காக எங்களால் காத்திருக்க முடியவில்லை. அதனால் நாங்களே மிதவைகளை உருவாக்கி கடந்த 2 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இங்கிருக்கிற பலருக்கு மருத்துவ உதவிகள் தேவையாக இருக்கிறது. சிலர் தினமும் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும்.
இதனால் தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறோம். இதை ஹீரோயிசமாக அல்ல, எங்கள் கடமையாக நினைக்கி றோம். எனது திருமணம் பற்றி கேட்கிறார்கள். என் வருங்கால மனைவி அஜிதா, ஆலுவாவை சேர்ந்தவர். எங்கள் திருமணம் அடுத்த மாதம் நடக்கும். திருமணத்தை தள்ளி வைக்கலாம். நிவாரண உதவியை தள்ளி வைக்க முடியுமா?’ என்றார் ராஜீவ் பிள்ளை.