‘எனக்குப் பிடித்த 3 முக்கிய பண்புகள்’: ரஜினி, விஜய், அஜித் குறித்து விவேக்
ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் ஆகிய மூவரிடம் தன்னை கவர்ந்த விஷயங்கள் என்ன என்று நடிகர் விவேக், அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்ளில் ரசிகர்களின் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கும் வழக்கம் ட்விட்டர் வந்த பிறகு தொடங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் சமந்தா அவரது ரசிகர்களின் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க முன்வந்தார். அதேபோல் டாப்சி கூட இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அதிகம் புழங்காத நடிகர் விவேக், அவரது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார். அவரிடம் விஜயகாந்த் குறித்து சக்திவேல் என்பவர், ‘கேப்டனிடம் உங்களுக்கு எந்த பண்பும் பிடிக்காதா?’ எனக் கேட்டார். அதற்கு விவேக், ‘விஜயகாந்த் ஒரு வாழும் வள்ளல். மனதில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் குழந்தை. அப்துல் கலாம் உடல் பார்த்து கண்ணீர் சிந்திய மாமனிதர்” எனக் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்வியில் ரஜினிகாந்த், விஜய், அஜித் குறித்து தனது கருத்தை விவேக் முன்வைத்துள்ளார். அவரது பதிவில் ‘எனக்குப் பிடித்த 3 முக்கிய பண்புகள்’ எனக் கூறியுள்ள அவர், ‘யார் பற்றியும் அவதூறு பேசாத ரஜினிகாந்த், எதிர்மறையான எண்ணங்களை புறந்தள்ளக் கூறிய (ignore negativity) விஜய், வாழு, வாழ விடு என வாழும் அஜித்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லோரும் அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவோம் எனக் கூறுகிறார்கள். ஆனால், செய்வதில்லை. நீங்கள் மட்டுமே செயல்படுத்துகிறீர்கள் என சொன்னதற்கு ‘ நான் எதையும் எதிர்பார்த்தோ, பெருமைக்காகவோ இதைச் செய்யவில்லை. இது கலாம் ஐயா எனக்கு இட்ட பணி. நான் நடும் ஒவ்வொரு மரக்கன்றும், என்னைப் பின் தொடர்ந்து மற்றவர் நடும் ஒவ்வொரு கன்றும் அவருக்கு செய்யும் மரியாதை” எனக் கூறியுள்ளார் நடிகர் விவேக்.