“தேசத் துரோகியாக இருப்பது தப்பு” -‘விஸ்வரூபம்-2’ கமல் பஞ்ச்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வரூபம்2’. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், நாசர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியானது. தமிழ்ப் பாகத்தின் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆர்ரும், இந்தி பாகத்தின் ட்ரெய்லரை அமீர்கானும் வெளியிட்டனர். ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தில் காதல் காட்சிகள் அவ்வளவாக இல்லாத நிலையில், இரண்டாம் பாகத்தில் காதல் காட்சிகள் அதிகமாக இருக்கும் என முன்பே படக்குழு கூறியிருந்தது.
அதேபோல் ‘விஸ்வரூபம்2’ ட்ரெய்லரில் காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதிரடி சண்டைக்காட்சிகள் முதல் பாகத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அதில் ‘எந்த மதத்தையும் சார்ந்து இருப்பது பாவம் இல்லை பிரதர், ஆனால் தேசத் துரோகியாக இருப்பது தப்பு’என கமல் பேசும் வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.