சினிமா
‘ யார்க்கர் வித்தையைச் சொல்லிக் கொடுங்கள்’- அல்லு சிரிஷூக்கு உதவிய விஷ்ணு விஷால்
‘ யார்க்கர் வித்தையைச் சொல்லிக் கொடுங்கள்’- அல்லு சிரிஷூக்கு உதவிய விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷுக்கு கிரிக்கெட் ஆட்டத்திற்காக டிப்ஸ் கொடுத்து உதவி இருக்கிறார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், தமிழ் திரைப்படமான ‘கெளரவம்’ மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இளம் நடிகரான இவர் வீட்டில் தங்கியிருக்கும்போது, கிரிக்கெட் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள விரும்பி இருக்கிறார். எனவே இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளக் குறிப்புகளைக் கொடுத்து உதவும்படி கேட்டுக் கொண்டார்.
இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால் அல்லு சிரிஷ், கிரிக்கெட் ஆட்டத்தில் லெக் விக்கெட் யார்க்கரை விளையாட பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்டு டிப்ஸ் கேட்டார். பேட்டிங்கில் இவர் பலவீனமாக இருந்ததோடு, அவர் யார்க்கர்களை ஆடும் வித்தையை மேம்படுத்த உதவிகளைக் கேட்டார். அவரது பதிவில், “இந்த ஆண்டு ஐ.பி.எல். ஆட்டத்தை தவறவிட்டுவிட்டோம். லெக் விக்கெட் யார்க்கரை விளையாட முயற்சிக்கும் வீடியோ இது. பேட்டிங் செய்யும் போது இது எப்போதும் எனது பலவீனமான இருந்து வருகிறது. ஏதாவது குறிப்புகள் கொடுத்து உதவுங்கள் நண்பர்களே” என்றார்.
இதற்குப் பல ரசிகர்கள் சில குறிப்புகளை அவருக்குக் கொடுத்தனர். ஆனால் அதில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு ஒருவரிடமிருந்தும் வந்தது. அவர் வேறு யாருமில்லை. தமிழ்த் திரைப்பட நடிகரும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்படுபவருமான விஷ்ணு விஷால்தான் அது. விஷ்ணு விஷால் தான் பார்த்த வீடியோவில் இருந்து சில நுட்பங்களை அவர் கிரகித்து டிப்ஸ் கொடுக்க முன்வந்தார். மேலும் அவர் யார்க்கரை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர். டி.என்.சி.ஏ லீக் ஆட்டங்களில் விளையாடியவர். எதிர்பாராத விதமாக இவர் காலில் காயம் ஏற்பட்டதால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிக்கெட் வீரரைப் பற்றி எடுக்கப்பட்ட 'ஜீவா' படத்திலும் இவர் நடித்தார்.