மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து கரம் பிடித்த தனது மனைவி ரஜினி நடராஜை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ‘குள்ளநரி கூட்டம்’, முண்டாசுபட்டி’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
விஷ்ணு விஷால் 4 வருடமாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியர் ரஜினி என்ற பெண்ணை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே இருவருக்கும் இடையே சில மாதங்களாக மன வருத்தம் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இருவரும் சட்டப்படி விவாகாரத்து பெற்று விட்டதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களுக்கு அழகிய மகன் உள்ளான் என்றும் அவனை இருவரும் நல்ல முறையில் வளர்ப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இனி நல்ல நண்பர்களாக இருப்போம் எனவும் எங்கள் மகன் மற்றும் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.